×

செயலிழந்த சிறுநீரகத்தால் அவதி; 11 வயது மகளுக்காக உயிர்வாழ துடிக்கும் நடிகை: கிட்னி தானம் செய்ய 1,000 பேர் முன்வந்தும் தவிப்பு

 

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக உயிருக்குப் போராடும் நடிகை பிஜோ பிலிப்ஸ் தனக்கு சிறுநீரகம் வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறக்கும் போதே சிறுநீரகக் குறைபாட்டுடன் பிறந்த ஹாலிவுட் நடிகை பிஜோ பிலிப்ஸ் (45), தனது வாழ்நாள் முழுவதும் இந்த பாதிப்புடன் போராடி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு அவரது நண்பர் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். அந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகள் நலமுடன் இருந்தார். சமீபத்தில் தனது கணவர் டேனி மாஸ்டர்சனிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர், 11 வயது மகள் பியன்னாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் புகுந்த பி.கே வைரஸ் பாதிப்பு காரணமாக, தானமாகப் பெற்ற சிறுநீரகம் தற்போது முற்றிலுமாகச் செயலிழந்து போனது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தீவிரமாகச் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில், ‘எனது 11 வயது மகளுக்காக நான் உயிர்வாழ வேண்டும், யாராவது சிறுநீரகம் தானம் கொடுத்து உதவுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று 24 மணி நேரத்தில் 1,000 நபர்கள் முன்வந்த போதிலும், அவருக்குப் பொருத்தமான சிறுநீரகம் இதுவரை கிடைக்கவில்லை. ‘பி’ எதிர்மறை ரத்த வகை கொண்ட அவருக்கு, அதே ரத்த வகை அல்லது ‘ஓ’ ரத்த வகை கொண்ட நபர்களிடம் இருந்து மட்டுமே சிறுநீரகம் பெற முடியும் என்பதால், அவருக்குப் பொருத்தமான நபரைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : Los Angeles ,Bijo Phillips ,Hollywood ,
× RELATED வங்கதேசத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிக்கிறது BNP கட்சி!