×

வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி: கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரகுமான் புதிய பிரதமராகிறார்

டாக்கா: வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் தாரிக் ரகுமான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. தொடர்ந்து 18 மாதங்கள் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில், 13வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் தலைவருமான தாரிக் ரகுமான் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. ஹசினாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் தேர்தலில் பங்கேற்வில்லை.

மொத்தமுள்ள 300 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தலின் போது ஷெர்பூர் 3 தொகுதியில் ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி வேட்பாளர் நுஸ்ருதின் பாதல் உயிரிழந்ததால், அந்த ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மொத்தம் உள்ள 300 இடங்களில் 299 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடந்தது. இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, பிஎன்பி தலைமையிலான கூட்டணி 151க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. சுமார் 17 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பரில் வங்கதேசத்திற்கு திரும்பிய தாரிக் ரகுமான், தான் போட்டியிட்ட டாக்கா 17 மற்றும் போகுரா 6 ஆகிய 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் பாகிஸ்தானின் நெருக்கமான கட்சியாக அறியப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிஎன்பி தேர்தலில் வெற்றி பெற்றால் வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக தாரிக் ரகுமான் பதவியேற்பார் என்று கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது. தேர்தல் ஆணையம் பிஎன்பி கட்சியின் வெற்றியை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

வெற்றி குறித்து பேசிய தாரிக் ரகுமான், ‘தொண்டர்கள் யாரும் வெற்றி ஊர்வலங்கள் நடத்த வேண்டாம், மாறாக நாட்டின் நலனுக்காக நாடு முழுவதும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இந்திய அரசுடன் இணக்கமான உறவை பேணுவதுடன், ஜனநாயகத்தை நிலைநாட்ட பாடுபடுவேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் மூலம் தாரிக் ரகுமான் வெற்றிப் பெற்றதால், இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார்.

* தொலைப்பேசியில் மோடி வாழ்த்து
வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலமாக கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானை தொடர்பு கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,\\\\”வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான தாரிக் ரஹ்மானின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்தேன்.

ஆழமான வேரூன்றிய வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை கொண்ட இரண்டு நெருங்கிய அண்டை நாடுகளான நமது இருநாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஒரு எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடி, \\” . தாரிக் ரஹ்மானின் வெற்றி வங்கதேச மக்கள் அவரது தலைமையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகின்றது.

வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். பிஎன்பி கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் நஸ்ருல் இஸ்லாம் கான், எங்கள் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். புதிய அரசின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

* சீனா ஆதரவு
சீனாவின் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ‘‘வங்கதேசம் நிலையான மற்றும் சுமூகமான பொதுத் தேர்தலை நடத்தியதை சீனா கவனித்தது. பிஎன்பி முழுமையான பெரும்பான்மையை பெற்றுள்ளது. தனது உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் வங்கதேசத்தை சீனா ஆதரிக்கிறது.சீனா-வங்கதேச மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என்றார்.

* 7 பெண் எம்பிக்கள் தேர்வு
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் 7 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 6 பேர் பிஎன்பி யை சேர்ந்தவர்கள். மேலும் ஒரு பெண் வேட்பாளர் பிஎன்பியில் இருந்து வெளியேற்றப்பட்டு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

* ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியானது பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விசாரணையை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்ற தனது உறுதியான நிலைபாட்டை நேற்று மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

Tags : BNP ,Amoka ,Bangladesh ,Kalita Jia ,Tariq Raguman ,Dhaka ,parliamentary ,Modi ,Sheikh Hasina ,
× RELATED ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன் – டிரம்ப் அறிவிப்பு