×

அதிமுகவில் சீட் கேட்கும் நில அபகரிப்பு ராஜா

நீ லகிரி மாவட்டத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள நகரம் குன்னூர். இதுவரை நடந்த 16 சட்டமன்ற தேர்தல்களில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 10 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தமாகா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சாந்தி ராமு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலும் குன்னூர் தொகுதியில் போட்டியிட முயன்று வந்தார். ஊட்டி தொகுதியில் பாஜ போட்டியிட்டதால், கடைசி நேரத்தில் குன்னூர் தொகுதிக்கு மாறிய அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்தால், சாந்தி ராமுவிற்கு சீட் கிடைக்காமல் போனது.

கடந்த முறை தான் ஏமாந்து விட்டேன். இந்த முறை விடமாட்டேன் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்தே குன்னூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு வேலைசெய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் சுற்றுப்பயணம் வந்த எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கான அனைத்து செலவுகளையும் இவரே கவனித்துள்ளார். இந்த சூழலில் குன்னூர் தொகுதியில் போட்டியிட வழக்கறிஞரான முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமாரும், குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஹெம்சந்த் ஆகியோரும் விருப்பமனு அளித்துள்ளனர்.

இவர்கள் 3 பேரில் இம்முறை சாந்தி ராமுவிற்கு தான் சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், முத்திரை தாளில் திருத்தம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மற்றும் தொழிற்சாலையை அபகரித்ததாக கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் சாந்தி ராமு மீது 5 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு காரணமாக சுமார் 1 மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த சாந்தி ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பின்னரே வெளியில் தலைகாட்டினார்.

இந்தசூழலில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மையில் சாந்தி ராமு மீதான வழக்கு ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குன்னூர் தொகுதி எம்எல்ஏ சீட் கனவில் இருந்த சாந்தி ராமுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கில் சாந்தி ராமுவிற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளது, அதிமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது. குன்னூர் தொகுதியை குறி வைத்துள்ள மற்றொரு பிரமுகரான ஹெம்சந்த்தும், அவர் எப்படி சீட் வாங்குகிறார் என பார்க்கிறேன் என்று, சாந்தி ராமுவிற்கு எதிரான நில அபகரிப்பு விவகாரங்களை சமூக வலைதளங்களில் நேரடியாகவே பதிவிட்டு வருகிறாராம். இதனால் நமக்கு தான் சீட் என்ற கனவில் இருந்த சாந்தி ராமு, தனது தலைக்குமேல் நில அபகரிப்பு வழக்கு என்ற கத்தி தொங்குவதை எப்படி சமாளிப்பது என பதற்றத்தில் இருக்கிறாராம்.

* பொள்ளாச்சியை அசிங்கப்படுத்திய இளைஞர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ.வாக இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவர், இத்தொகுதியில் அதிமுக சார்பில் 2001, 2006, 2016, 2021 என 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்தாலும், இவர் தொகுதி பக்கம் எட்டிப்பார்ப்பது கிடையாது, மக்கள் பிரச்னை பற்றி கேட்பது கிடையாது என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இவர், தொகுதிக்குள் அவ்வப்போது தலை காட்டுகிறாராம். அதுவும், முழு அளவில் இறங்கி வந்து, வேலை செய்வது இல்லையாம். மக்கள் பிரச்னை பற்றி கேட்பதும் இல்லையாம். இவரது நடவடிக்கை குறித்து உள்ளூர் இளைஞர்கள் சிலர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இவரது படத்தை வரைந்து, பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குப்பை குவியல்களுக்கு நடுவே நின்று, தனது சாதனைகள் குறித்து இவர் ஆவேசமாக பேசுவது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர். இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Kunnur ,Ni Lagiri district ,Dimuka ,Adamuka ,Congress ,Damaga ,
× RELATED சொல்லிட்டாங்க…