- அமித் ஷா
- எடப்பாடி
- திருச்சி
- அஇஅதிமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- பா.ம.க.
- அன்புமணி
- டி.எம்.எம்.
- AMMK
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக(அன்புமணி) தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தனித்தே ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறார். ஆனால், கூட்டணி உறுதியான போது, அமித்ஷா கூட்டணி ஆட்சி என்றார். அன்புமணி மற்றும் தமிழக பாஜ தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி இருந்தாலும், கூட்டணி விவகாரத்தை எல்லாம் டெல்லி பாஜ தலைமை தான் மேற்கொண்டு வருகிறதாம். கூட்டணிக்குள் யார் வர வேண்டும், வர வேண்டாம் என்பதையும் அமித்ஷா தான் முடிவு செய்வதாக கூறப்படுகிறது.
திருச்சிக்கு ஜன.4ம் தேதி வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் வந்து அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, கூட்டணிக்குள் அன்புமணி, டிடிவியை சேர்த்தே ஆக வேண்டும் என்று அமித்ஷா மிரட்டியதாக கூறப்படுகிறது இதன்பிறகு தான் அமமுக, பாமகவுடன் கூட்டணி உருவானது. இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு மீண்டும் திருச்சி வந்தார். இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று காலையும் அங்கேயே இருந்தார்.
ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மேலும் சில கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம். வரும் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் புதிதாக கூட்டணியில் இணைய உள்ள கட்சிகளின் தலைவர்கள் மேடை ஏறுவார்கள் என கூறப்படுகிறது. கூட்டணிக்கு நாமதான் தலைமை என்று சொல்கிறோம். ஆனா, முந்திரிக்கொட்டை தனமான அமித்ஷாவின் செயல்படுகிறார் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணியை அமித்ஷாவே முடிவு செய்கிறார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளையும் அவரே தேர்வு செய்கிறார். இப்படி இருந்தால், கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள் தன்னை எப்படி மதிப்பார்கள் என்று எடப்பாடி, தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். இதனால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷா இன்று காரைக்காலில், ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்ளவதற்காக திருச்சி வந்து காரைக்கால் செல்கிறார். ஆனால், ஒரு முன்னதாகவே அவர் திருச்சி வந்து தங்கி காரைக்காலுக்கு செல்கிறார். கடந்த முறை திருச்சியில் இருந்த போது தான், பேச்சுவார்த்தை மூலம் அமமுக, பாமகவுடன் கூட்டணி உறுதியானது. எனவே திருச்சியை ராசியான ஊராக அமித்ஷா நினைக்கிறாராம். அதனால் தான், இந்த முறையும் திருச்சியிலேயே தங்கி மேலும் சில கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளாராம்.
* இன்னும் ஒரு தேர்தல கூட சந்திக்கல… மக்களை சந்திக்குற திறன் விஜய்கிட்ட இல்ல: போட்டு தாக்கிய இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வழியாக சேலம் சென்றார். முன்னதாக ஆம்பூரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தேர்தல் அறிவிப்பு வரும் வேளையில் ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. திமுகவிற்கு சென்று திரும்பியவர் தான் முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில். அவர் குறித்து எங்களிடம் எந்த பதிலும் இல்லை. தமிழகத்திற்கு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வாய்ப்பிருந்தால் சந்திப்போம். தவெக தலைவர் விஜய் கட்சி துவங்கி இன்னும் ஒருமுறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. அவர் தேர்தலை சந்திக்கட்டும். பிறகு பார்க்கலாம்.
அதிமுக பொன்விழா கண்ட கட்சி. எங்களது தலைவர்கள் காட்டிய வழியில் நாங்கள் நடக்கிறோம். விஜய்க்கு என்ன தெரியும்? ஒரு பிரச்னை நடந்து 72 மணி நேரம் வெளியே வரவில்லை. கட்சி தலைவர் என்றால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த கட்சி தலைவர் பதில் தரவேண்டும். அவர் மக்களை சந்திக்கவில்லை. அவர் கடமையை செய்யவில்லை. 41 பேர் பலியான பிறகு, 15 நாட்கள் கட்சி அலுவலகத்தை மூடியவர் விஜய். பிரச்னையின்போது மக்களை சந்திக்க கூடிய திறன் கூட அவருக்கு இல்லை. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக. அதிமுகவிற்கு ஆண்சாதி, பெண் சாதி என்ற 2 சாதிகள் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
