×

வங்கதேசத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த BNP கட்சி: பிரதமர் மோடி வாழ்த்து!

 

டெல்லி: வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 18 மாதங்களுக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 300 தொகுதியில், ஒரு தொகுதியில் வேட்பாளரின் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 50 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வங்கதேச பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP கட்சி. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ள BNP கட்சி, மேலும் சுமார் 50 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வெறும் 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவு. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி உள்ளேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

 

 

Tags : BNP party ,Bangladesh ,PM Modi ,Delhi ,Modi ,Tariq Rahman ,Bangladesh General Election ,Bangladesh parliamentary ,BNP ,Jamaat ,Islami ,
× RELATED இபிஎஃப் குறைந்தபட்ச மாதாந்திர...