×

இந்தூரில் பயங்கரம்: மின்வாகன சார்ஜ் பாயிண்ட் வெடித்து தீ விபத்து; 8 பேர் பலி

இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பிரஜேஸ்வரி அனெக்ஸ் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு மூன்றடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மின்சார கார் சார்ஜ் செய்யப்பட்டு கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சார்ஜிங் பாயிண்ட் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து வேகமாக பரவிய தீ, குடியிருப்புகளுக்கும் பரவியது. அப்போது, வீட்டிலிருந்த சமையல் சிலிண்டர்களும் வெடித்து சிதறின. விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அத்துடன் சார்ஜரில் தீ விபத்து ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக குடியிருப்பு கட்டிடத்தில் நிறுவப்பட்டிருந்த மின்சார பூட்டுகளை திறக்க முடியவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வௌியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை நீண்டநேர போராட்டத்துக்கு பின் அணைத்தனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6, 12 வயது குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்த 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு ம.பி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மின் வாகன சார்ஜிங் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Indore ,Prajeswari Annex ,Colony ,Madhya Pradesh ,
× RELATED 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி ஒன்றரை நாளின்...