புதுடெல்லி: இபிஎஃப் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000லிருந்து உயர்த்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஓய்வூதிய திட்டத்தின்கீழ், ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம், 1995(இபிஎஸ்-95)கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து நீண்டகாலமாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து நாடாளுமன்ற குழு ஒன்றிய அரசுக்கு ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. அதில், “இபிஎஸ்-95 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000லிருந்து உயர்த்துவது குறித்து அவசரமாக மறுஆய்வு செய்ய வேண்டும். அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது தற்போதுள்ள ஓய்வூதியம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை” என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மோடி அரசாங்கத்தின் 12 ஆண்டுகால ஆட்சியில், பல சமூக பாதுகாப்பு திட்டங்கள் படிப்படியாக வலுவிழந்து விட்டன அல்லது வேண்டுமென்றே குறைமதிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், ஓய்வூதியம் போன்ற அடிப்படை வசதிகள் கூட நீண்டகாலமாக மாறாமல் உள்ளது. இது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவாக கருதப்படும் முதியோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஓய்வூதியதாரர்களை நேரடியாக பாதித்துள்ளது.
இது மில்லியன் கணக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கை தொடர்பான பிரச்னையாகும். நாடாளுமன்ற குழுவின் இந்த பரிந்துரையை தொடர்ந்தாவது, அரசாங்கம் விழித்து கொண்டு இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
