×

ஆம்னி பஸ் கட்டண உயர்வை கண்டித்து தந்தையை பார்சல் செய்து கூரியரில் அனுப்ப முயன்ற மகள்: வடிவேலு பட காமெடி பாணியில் பெங்களூருவில் சம்பவம்

பெங்களூரு: ஆம்னி பஸ் கட்டண உயர்வை கண்டித்து வடிவேலு பட காமெடியில் வருவதைப் போல, பெங்களூருவில் தந்தையை மூட்டையாகக் கட்டி மகளே கூரியரில் பார்சலாக அனுப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதியவரை கோணிப்பையில் வைத்து கட்டி கூரியரில் அனுப்புவதற்காக 5 பேர் தூக்கி வந்துள்ளனர். அவர்கள் வயாலிகாவல் பகுதியில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு சென்று, பார்சல் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை எடை போட ஊழியர்கள் தூக்கினர். அப்போது பார்சல் அசைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே பார்சலை திறந்து பார்த்ததில், அதில் ஒரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ‘யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால், அரசு பேருந்துகளில் சீட் கிடைக்கவில்லை. தனியார் பேருந்துகளில் டிக்கெட் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே தங்களது சிரமத்தையும், அதிருப்தியையும் உணர்த்தும் விதமாக, முதியவர் ஒருவரை கூரியரில் கட்டி பார்சலாக அனுப்பி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் போட அவரது மகள் முயற்சித்தது தெரியவந்தது. இந்த செயலை கண்டித்த போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட அவரது மகள், இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்தார்.

பின்னர் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர். ஒரு திரைப்படத்தில் வடிவேலு கூரியர் கம்பெனி நடத்துவார். பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதால், மொத்த குடும்பத்தினரையும் ஒரு நபர் தனித்தனி மூட்டையாகக் கட்டி பார்சலாக அனுப்ப முயற்சிப்பார். அந்த காமெடி காட்சியை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக பெங்களூருவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

Tags : Omni ,Bangalore ,Bengaluru ,
× RELATED 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி ஒன்றரை நாளின்...