புதுடெல்லி: தேவகவுடா எங்களை நேசித்தார், ஆனால் மோடியை திருமணம் செய்து கொண்டார் என்று தேவகவுடா பற்றி மல்லிகார்ஜூன கார்கே பேசிய பேச்சால் மாநிலங்களவை சிரிப்பலையில் மூழ்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இருந்து இன்றுடன் (நேற்று) ஓய்வுபெறும் உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை அளித்து நேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மோடி தலைமையிலான தேஜ கூட்டணியுடனான அவரது தொடர்பு குறித்து கிண்டலாக பேசினார். அவர் பேசுகையில், மதசார்பற்ற ஜனதாதளம் பாஜவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு அந்த தலைவரை(தேவகவுடா) 54 ஆண்டுக்கும் மேலாக எனக்கு தெரியும். அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் எங்களை(காங்கிரஸ்) நேசித்தார், ஆனால் மோடியை திருமணம் செய்து கொண்டார் என்று கூறியதும் மோடி உட்பட சபையில் இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.
கடந்த 1996ல் காங்கிரஸின் ஆதரவு பெற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஆதரவுடன் தேவகவுடா பிரதமரானார். கர்நாடகாவில், அவரது கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
