மோர்வி: குஜராத்தில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக 400க்கும் மேற்பட்ட செராமிக் ஆலைகள் 3 வாரத்திற்கு இயங்காது என அறிவித்துள்ளன. இந்தியாவின் ‘செராமிக் நகரம்’ என குஜராத்தின் மோர்வி அழைக்கப்படுகிறது. இது உலகின் 2வது பெரிய செராமிக் மற்றும் டைல்ஸ்களை உற்பத்தி செய்யும் நகரமாக திகழ்கிறது. இங்கு மொத்தம் 670 ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கு ஆசியா போர் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மோர்வியில் உள்ள 670 ஆலைகளில் 430 ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இது குறித்து மோர்வி செராமிக் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மனோஜ் அரவாடியா அளித்த பேட்டியில், ‘‘430 ஆலைகள் ஏப்ரல் 10 அல்லது 15ம் தேதி வரை இயங்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளன. இக்காலகட்டத்தை இயந்திரங்களின் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம். புதிய எரிவாயு விநியோகம் கிடைப்பதைப் பொறுத்து, இந்த ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும்’’ என்றார்.
செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தி ஆலைகள், சூளைகளைச் சூடாக்குவதற்கும் உலர்த்துவதற்கும் புரொப்பேன் அல்லது இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்திருக்கின்றன. தற்போது வளைகுடா நாடுகளில் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதால் மோர்வி ஆலைகள் பாதிப்பை சந்தித்துள்ளன.
