புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்த மூலம் பாரத மாதாவை அரசு விற்றுவிட்டது. 140 கோடி இந்தியர்களை டிரம்ப்பிடம் மோடி சரண் அடைய வைத்து விட்டார் என்று மக்களவையில் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று பேசியதாவது: இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டு மொத்தமாக சரண் அடைந்து விட்டனர்.
பிரதமர் மோடியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சிறிது காலத்திற்கு முன்பு போர் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கூறினா். ஆனால் உண்மையில், நாம் போர் சகாப்தத்திற்குள் நகர்கிறோம். உக்ரைனில் போர் நடக்கிறது, காசாவில் போர் நடக்கிறது, மத்திய கிழக்கில் போர் நடந்து வருகிறது, ஈரானில் போர் அச்சுறுத்தல் உள்ளது. நம்மிடம் இன்னும் ஆபரேஷன் சிந்தூர் உள்ளது. நாம் ஒரு ஆபத்தான உலகத்திற்குள் நகர்கிறோம். நமது பலங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் நமது நாட்டின் மைய பலம் நமது மக்கள்தான். நாட்டின் மக்கள், தரவு, உணவு வழங்கல் மற்றும் எரிசக்தி அமைப்பைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
உண்மையிலேயே இந்தியா கூட்டணி அரசு இப்போது இருந்து, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், அது அதிபர் டிரம்பிடம் அவர் இந்தியாவை சமமாக நடத்த வேண்டும் என்று கூறியிருக்கும். இந்த சமன்பாட்டில் மிக முக்கியமான சொத்து இந்திய தரவுகள் என்பதை நாங்கள் (டிரம்பிடம்) முதலில் கூறுவோம். அமெரிக்கா டாலரைப் பாதுகாக்க விரும்பினால், இந்திய தரவு மிகப்பெரிய சொத்து என்பதை அது அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் அதை அணுக விரும்பினால், நீங்கள் எங்களுடன் சமமாகப் பேசுவீர்கள், நாங்கள் உங்கள் ஊழியர்கள் போல் எங்களுடன் பேசக்கூடாது என்று நாம் அதிபா் டிரம்பிடம் கூறுவோம்.
இந்தியா கூட்டணி அரசாங்கம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து பேரம் பேச முடியாது. நாங்கள் எங்கள் எரிசக்தி பாதுகாப்பைப் பாதுகாக்கப் போகிறோம் என்றும் டிரம்பிடம் கூறியிருக்கும். மூன்றாவது விஷயம், உங்களிடம் விவசாய வளம் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நீங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும், ஆனால் நாங்கள் எங்கள் விவசாயிகளையும் பாதுகாப்போம் என்று டிரம்பிடம் கூறியிருப்போம். இந்தியா கூட்டணி அரசாங்கம் தகவல்கள் நமது மிகப்பெரிய பலம் என்று கூறும். இப்போது நாம் பேசுவோம். சமமாக பேச்சுவார்த்தைக்கு அங்கு செல்வோம். நாங்கள் பாகிஸ்தானுக்கு சமமாக இருக்க மாட்டோம். பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அவருடன் காலை உணவு சாப்பிடுவார் என்று டிரம்ப் முடிவு செய்தால், அதைப் பற்றி எங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும்.
மோடி அரசு எரிசக்தி மற்றும் ஆயுதமயமாக்கல் பற்றிப் பேசுகிறது. ஆனால் நமது நிதி மற்றும் நமது ஆற்றலை நமக்கு எதிராக அமொிக்கா ஆயுதமாக்க அனுமதித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளது, ஜவுளித் துறை அழிக்கப்பட்டுள்ளது, எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மொத்த சரணடைதல். இது ஒரு சோகம். ஏனெனில் இது பிரதமரின் சரணடைதல் மட்டுமல்ல; 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் மோடி சரணடைய வைத்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு வழக்கு இருக்கும். பாஜவின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாக்க விரும்பியதால் அவர் சரணடைந்துள்ளார். நாம் கொந்தளிப்பான காலகட்டத்தை நோக்கிச் செல்கிறோம், தேசமே விற்றுத் தீர்ந்துவிட்டது. அதன் தரவுகள் விற்கப்பட்டுள்ளன, அதன் விவசாயிகள் விற்கப்பட்டுள்ளனர், எங்கள் அனைத்து மென்பொருள் பொறியாளர்களும் விற்கப்பட்டுள்ளனர். சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் விற்கப்பட்டுள்ளன, எங்கள் படைகள் மற்றும் எங்கள் எரிசக்தி பாதுகாப்பு விற்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வர்த்தக விதிகள் மீதான கட்டுப்பாட்டை கைவிட்டுள்ளது, தரவு உள்ளூர்மயமாக்கலை நீக்கியுள்ளது, அமெரிக்காவிற்கு தரவு சுதந்திரமாக செல்ல அனுமதித்துள்ளது, டிஜிட்டல் வரியை கட்டுப்படுத்தியுள்ளது. மூலக் குறியீடு வெளிப்படுத்தலைத் தள்ளுபடி செய்துள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 20 ஆண்டு வரி விடுமுறைகளை வழங்குகிறது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, நமது விவசாயிகள் ஒரு புயலை எதிர்கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயந்திரமயமாக்கப்பட்ட அமெரிக்க பண்ணைகளுக்கு நீங்கள் கதவைத் திறந்துவிட்டீர்கள், இது எங்கள் சிறு விவசாயிகளை நசுக்குகிறது. இது அவமானகரமானது, உங்களுக்கு முன்போ அல்லது உங்களுக்கு பின்னரோ எந்த பிரதமரும் இதைச் செய்ய மாட்டார்கள். இவ்வாறு ராகுல்காந்தி பேசினாா்.
பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி
மக்களவையில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். அதன் விவரம்:
* இந்த அவைக்கு நீங்கள் வந்து எப்படி இதை நியாயப்படுத்த முடியும்?
* ஒப்பந்தம் செய்யும் முன்பு நீங்கள் வெட்கப்படவில்லையா?.
* அதனால் தான் நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள் என்று நான் சொல்கிறேன். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
* நீங்கள் எங்கள் தாயான பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
* நமக்கு 18 சதவீத வரி அமெரிக்காவுக்கு பூஜ்ஜிய வரியா?
ராகுல்காந்தி பேசும் போது,’ பிரதமர் மோடி இந்த அளவுக்கு சரண் அடைந்த பிறகும் அமெரிக்க வரி குறையவில்லை. டிரம்ப் வரி விதிப்பதற்கு முன்பு ஆரம்பத்தில் இந்திய பொருட்களுக்கு சராசரியாக 3 சதவீத வாி இருந்தது. ஆனால் இப்போது அது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் வா்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு அவர்கள் வரி 16 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இறக்குமதிகள் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து இனிமேல் ரூ.45 லட்சம் கோடியாக உயரும். இது அபத்தமானது’ என்றார்.
* மோடியின் கழுத்தை அமெரிக்கா நெரிக்கிறது
ராகுல்காந்தி பேசும் போது,’மோடி உட்பட எந்த இந்திய பிரதமரும் அத்தகைய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. அவர் (மோடி) ஏன் இந்தியாவை விற்றார். ஏனென்றால் அவர்கள் (அமெரிக்கா) அவரை நெரிக்கிறார்கள். அவர்கள் அவரது கழுத்தில் ஒரு பிடியைக் கொண்டுள்ளனர். தற்காப்புக் கலைகளில் ஒரு பிடியைப் பெற்ற பிறகு, அடுத்த படி மூச்சுத்திணறல், பின்னர் எதிராளி கைவிடத் தட்டுவதுதான் நடக்கிறது’ என்றார்.
* மோடிக்கு வந்த நெருக்கடி
பாரத மாதாவை நீங்கள் விற்றுவிட்டீர்கள் என்று ராகுல்காந்தி பேசும் போது பா.ஜ எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்கிறாா். அவரது பேச்சுக்கான ஆதாரத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு ராகுல்காந்தி எதையும் சந்திக்க, ஆதாரம் அளிக்க நான் தயார் என்றார். மேலும் அமெரிக்காவில் ஒரு தொழிலதிபர் மீதான வழக்கையும் காந்தி குறிப்பிட்டார்.
* மோடி முடிவு செய்ய முடியாது அமெரிக்கா தான் தீர்மானிக்கும்
ராகுல்காந்தி பேசும் போது,’தற்போது நடந்துள்ள இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு போய்விட்டது. இனி நாம் யாரிடமிருந்து எண்ணெய் வாங்குகிறோம் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும். அதை நமது பிரதமர் முடிவு செய்ய மாட்டார். அவர்கள் கண்காணிப்பார்கள் ’ என்றார்.
* அதானி வழக்கு, எப்ஸ்டீன் பைல் அனில் அம்பானி, ஹர்தீப்சிங் பூரி சரமாரியாக விளாசிய ராகுல்காந்தி
நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி பேசும் போது,’ மிகவும் முக்கியமான விஷயம், பிரதமர் பலன் இல்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப்பிடித்து இருக்கிறார்கள். அதனால் பிரதமர் கண்களில் பயம் ஏற்பட்டுள்ளதை காணலாம். ஒன்று அதானி மீதான அமெரிக்காவின் வழக்கு. மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள எப்ஸ்டீன் பைல். அதில் 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம். தொழில் அதிபர் அனில் அம்பானி ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை. காரணம் எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது. அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியிடம் நான் கேட்கிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும். ஹர்தீப்சிங் பூரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்கு தெரியும்’ என்றார்.
* நீங்கள் என் பேச்சை கேட்டு இருந்தால் எதிர்க்கட்சியாக இருந்திருக்க மாட்டீர்கள் தற்காலிக அவைத்தலைவர்-ராகுல்காந்தி காரசாரம்
மக்களவையில் நேற்று ராகுல்காந்தி பேசும் போது அவைத்தலைவராக ஜெகதாம்பிகா பால் இருந்தார். அவர் 2009ல் காங்கிரஸ் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் பா.ஜவில் இணைந்தார். உத்தரபிரதேச மாநிலம் டோமரியாகஞ்ச் தொகுதியில் இருந்து 2019, 2024ல் பா.ஜ எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது சில பெயர்களை குறிப்பிட்டார். அதை ஜெகதாம்பிகா பால் எதிர்த்தார். அவர் கூறுகையில்,’எந்தவொரு விஷயமும் பட்ஜெட்டுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால், அதை நீங்கள் எழுப்ப முடியாது. நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். ஏன் தடம் புரண்டு கொண்டிருக்கிறீர்கள்?’ என்றார். அதற்கு ராகுல்காந்தி,’ உங்கள் மீது எங்களுக்கு அன்பு இருக்கிறது, நீங்கள் எங்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்.
எனவே இன்று நான் மிகவும் ஆக்ரோஷமாக இருக்க மாட்டேன். உங்கள் இதயம் பாஜவில் இல்லை என்பது எனக்குத் தெரியும்’ என்றார். அதற்கு பதில் அளித்த ஜெகதாம்பிகாபால்,’ நான் இங்கு அவையை தலைமை ஏற்று வழிநடத்திக்கொண்டு இருக்கிறேன். அன்று நீங்கள் என் அறிவுரையைக் கேட்டிருந்தால், நீங்கள் அங்கு (எதிர்க்கட்சி இருக்கைகளில்) அமர மாட்டீர்கள். நீங்கள் என் அறிவுரையை ஏற்காததால்தான் நீங்கள் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள். இப்போதும் கூட நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், நீங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது, நீங்கள் சரியான பாதையில் செல்லலாம்’ என்றார். இதையடுத்து ராகுல்,’ நீங்கள் விரும்பாத பெயர்களை அவையில் நான் குறிப்பிட மாட்டேன்’ என்றார்.
