×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கு சைதை துரைசாமிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: ஆதாரம் இல்லாத வாதங்களை வைப்பதா என்று எச்சரிக்கை

புதுடெல்லி: கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.கவின் சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த நீதிமன்றம், சைதை துரைசாமிக்கு சரமாரி கேள்வியெழுப்பி இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்நோய் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சைதை துரைசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,\\”கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காகவும், வெற்றி வாய்ப்பு அதிகரிப்பதற்காகவும் அரசு அதிகாரிகளை உள்ளிட்டோரை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.குறிப்பாக தேர்தல் நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்பு கூட காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தினர். அதேப்போன்று பூத் சிலிப்பில் சின்னம் பொறித்து வழங்கி இருந்தார்கள். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாகும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,\\” பூத் சிலிப்பில் சம்பந்தப்பட்ட கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன? அது சம்பந்தப்பட்ட வேட்பாளரின் சின்னம் தானா. குறிப்பாக இந்த விவகாரத்தில் நீங்கள் சமர்ப்பித்த ஆதாரமும் நீதிமன்றத்தின் பார்வையும் முரணாக இருக்கிறது. நீங்கள் கொடுத்திருக்கக்கூடிய ஆதாரங்களும் ஏற்கும்படியாக கிடையாது. சம்பந்தம் இல்லாத வாதங்களை முன்வைத்து வருகிறீர்கள். நீதிமன்றத்தின் நேரத்தை இரண்டு மாதமாக வீணடித்து வருகிறீர்கள். முறையான ஆதாரம் இல்லாமல் நீதிமன்றத்தில் வாதிட வரக்கூடாது. இப்போதே இந்த மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும். ஆதாரம் இருந்தால் தேடி எடுத்து வாருங்கள் என்று கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும்,அன்று தான் இந்த வழக்கு இறுதியாக இருக்கும், வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,Saidai Duraisamy ,Kolathur ,New Delhi ,AIADMK ,Madras High Court ,M.K. Stalin ,2011 Tamil Nadu assembly elections ,
× RELATED வர்த்தக ஒப்பந்தம் மூலம் பாரத மாதாவை...