×

இலவச அமரர் ஊர்தி இல்லாததால் தந்தையின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்: வீடியோ காட்சி வைரல்

திருமலை: ஆந்திராவில் அரசு மருத்துவமனை ஒன்றில் இலவச அமரர் ஊர்தி இல்லாததால் தந்தையின் சடலத்தை அவரது மகன்கள் பைக்கில் கொண்டு சென்ற காட்சி வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் கர்லபாலம் மண்டலம் சிந்தாயபாலம் பஞ்சாயத்து ரல்லா செருவுவை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ்(65), கூலித்தொழிலாளி. இவருக்கு நேற்றுமுன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை பைக்கில் பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோதே நாகேஸ்வரராவ் இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல அங்கு இலவச அமரர் ஊர்தி வசதி இல்லாததால் செய்வதறியாமல் குடும்பத்தினர் தவித்தனர்.

தனியார் வாகனங்களை நாடியபோது ரூ.4,000 வரை செலவாகும் என தெரிவித்தனர். ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் வேறுவழியின்றி சடலத்தை பைக்கில் கொண்டு சென்றனர். பைக்கை இறந்த நாகேஸ்வரராவின் இளையமகன் ஓட்ட, சடலத்தை நடுவில் அமரச்செய்து பின்னால் அவரது மூத்தமகன் பிடித்தபடி வீட்டுக்கு கொண்டுசென்றனர். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பாபட்லா கலெக்டர் வினோத்குமார் விசாரித்தார். இதுகுறித்து அதிகாரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாபட்லா அரசு மருத்துவமனைக்கு விரைவாக அமரர் ஊர்தி வசதி செய்ய அரசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.

Tags : THIRUMALI ,ANDHRA ,AP STATE BABATLA DISTRICT ,KARLAPALAM ZONE ,SINTHAYAPALAM ,PANCHAYATU RALLA SERUWU ,
× RELATED வர்த்தக ஒப்பந்தம் மூலம் பாரத மாதாவை...