டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும், சஞ்சு சாம்சன் ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து இந்திய அணியுடன் டெல்லி வந்தடைந்த அபிஷேக் சர்மா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது இல்லத்தில் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்தச் சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், விருந்து பாதியிலேயே முடிவதற்கு முன்பே அவர் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு வயிற்றுத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி 9, திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பிப்ரவரி 12-ம் தேதி(நாளை) நடைபெறவுள்ள நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் எனக் கருதப்படுகிறது. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டு, இஷான் கிஷனுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் சர்மா சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நமீபியாவுடனான போட்டிக்கு அடுத்தபடியாக, பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. இந்தப் முக்கியமான போட்டியில் அபிஷேக் சர்மா பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வரும் நாட்களில் அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தே அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது குறித்துத் தெரியவரும்.
