×

நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பிய மாஜி ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தின் ‘பிடிஎப் பைல் லீக்’: வழக்குப் பதிவு செய்து டெல்லி போலீஸ் விசாரணை

புதுடெல்லி: முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் அனுமதியின்றி இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு லடாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட எல்லை பிரச்னை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 2ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு புத்தகத்தைக் காட்டிப் பேசினார்.

அதில், ‘எல்லை பிரச்னையின் போது பிரதமர் மோடி தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் தவறிவிட்டார்’ என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டு, விவாதத்திற்கு இடையூறு விளைவித்ததாக 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த புத்தகம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதிய ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற நினைவலைகள் புத்தகத்தின் நகல் இணையதளங்களில் கசிந்தது குறித்து நேற்று டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த புத்தகத்தை அச்சிடத் தயாராக இருந்த பிடிஎப் கோப்பு பல்வேறு சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, இந்த கோப்பை முதலில் இணையதளத்தில் பதிவேற்றியது யார் என்பது குறித்தும், அதன் டிஜிட்டல் தடயங்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பிறகே, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தங்களது நினைவலைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த புத்தகத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத நிலையில், அதன் பக்கங்கள் கசிந்தது தேச பாதுகாப்பு தொடர்பான பிரச்னையாகக் கருதப்படுகிறது.

‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ என்ற பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது. சில இணையதள விற்பனைத் தளங்களில் இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் ஏற்கனவே விற்பனைக்கு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட பதிப்பகம், ‘இந்தப் புத்தகத்தை வெளியிடும் முழு உரிமையும் எங்களிடம் மட்டுமே உள்ளது. நாங்கள் இன்னும் எந்த வடிவிலும் இந்தப் புத்தகத்தை வெளியிடவில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், ‘தற்போது இணையத்தில் உலா வரும் தகவல்கள் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான மோதல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நாட்டின் பாதுகாப்புக் கருதி போலீசார் தொழில்நுட்ப ரீதியாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Majhi ,Parliament ,Delhi Police ,NEW DELHI ,India ,China ,Ladakh ,
× RELATED சென்னை, கோவையில் தனியார்...