×

பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி சபாநாயகரை பதவி நீக்க நோட்டீஸ்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல்; 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு

புதுடெல்லி: அவையை நடத்துவதில் அப்பட்டமான பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், காங்கிரஸ் எம்பிக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை சமர்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத விவகாரம் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை எதிர்த்து கேள்வி கேட்ட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொதுவாகவே அவையில் எதிர்க்கட்சியினரை சபாநாயகர் ஓம் பிர்லா பேசவே அனுமதிப்பதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் கொண்டு வர மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. இதற்காக தீர்மான நோட்டீசில் எதிர்க்கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாக மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், தலைமை கொறடா கே.சுரேஷ், கொறடா முகமது ஜாவேத் ஆகியோர் அரசியலமைப்பின் 94சி பிரிவின் கீழ் சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்திற்கான நோட்டீசை மக்களவை பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங்கிடம் நேற்று காலை சமர்ப்பித்தனர். இந்த நோட்டீசில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ஆர்ஜேடி, இடதுசாரிகள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்பின் பிரிவு 94சி-ன் விதிகளின்படி, மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்குவதற்கான தீர்மானத்தை இதன் மூலம் நாங்கள் அறிவிக்கிறோம். ஏனெனில் அவர் மக்களவையில் அப்பட்டமான பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருகிறார். பல சந்தர்ப்பங்களில், எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளின் அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது. கடந்த 2ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை.

அப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு அடுத்த நாளான 3ம் தேதி, 8 எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்திற்காக மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 4ம் தேதி, பாஜவை சேர்ந்த ஒரு எம்பி (நிஷிகாந்த் துபே) முன்னாள் பிரதமர்கள் மீது முற்றிலும் ஆட்சேபனைக்குரிய தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்த அனுமதிக்கப்பட்டார். எப்போதும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை.

சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்பாராத செயல்களை செய்யக்கூடும் என உறுதியான தகவல் கிடைத்ததால் பிரதமரரை அவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக ஓம் பிர்லா கூறினார். இது எங்கள் எம்பிக்கள் மீதான அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டு. இவை இழிவானவை. நாடாளுமன்ற நடத்தை விதிகளின் பாதுகாவலராக இருக்க வேண்டிய சபாநாயகர் இதுபோன்ற பொய் அறிக்கைகளை வெளியிடுவது அரசியலமைப்பு பதவியை தவறாக பயன்படுத்துவதை குறிக்கிறது.

மக்களவை சபாநாயகரை தனிப்பட்ட முறையில் நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம், எதிர்க்கட்சி எம்பிக்கள் சட்டப்பூர்வமான பிரச்னைகளை எழுப்புவதை அவர் தொடர்ந்து தடுத்த விதம் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.இந்த நோட்டீசை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை பொதுச் செயலாளருக்கு சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். இது ஆய்வு செய்யப்பட்டு விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை
சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசில் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை. இதற்கு காரணம், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இருப்பதால் அவரே சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை கோருவது முறையல்ல என்பதுதான்.

* பாஜ பெண் எம்பிக்கள் புகார்
கடந்த 4ம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பிரதமர் மோடி பதிலளிக்க அவைக்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜ கட்சியைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் அவையின் மையப்பகுதியில் நுழைந்தது மட்டுமில்லாமல் மேஜை மீது ஏறி, காகிதங்களை கிழித்து, சபாநாயகரை நோக்கி வீசியதை நாங்கள் கண்டோம். வருத்தமளிக்கும் விதமாக, எதிர்க்கட்சியின் சில பெண் எம்பிக்கள் ஆக்ரோஷமான நடத்தையுடன் பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டது மட்டுமல்லாமல், மூத்த அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலும் உள்ளே நுழைந்தனர். அந்த சமயத்தில் எங்கள் தரப்பில் அனைவரும் நிதானத்தை கடைபிடிக்கவில்லை என்றால் அவமானகர சூழ்நிலை உருவாகியிருக்கும். எனவே அவைக்குள் இதுபோன்ற கொடூர செயல்களை செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளனர்.

* திரிணாமுல் காங். நிலைப்பாடு என்ன?
சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீசில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கையெழுத்திடவில்லை. இது குறித்து அக்கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பதவி நீக்க தீர்மான நோட்டீசில் கையெழுத்திடுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக சபாநாயகரிடம் பேசியிருக்க வேண்டும். ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை கூறியிருக்கிறோம். அதில் 2, 3 நாளில் முடிவெடுப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார். அதன் பிறகும் அவர் முடிவெடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம்’’ என்றார்.

* மக்களவையில் அமளி நீங்கியது
சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை நடத்துவதில் இருந்த முட்டுக்கட்டை நீங்கியது. ஆளும்-எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் நேற்று பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பிற்பகலுக்குப் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் அமளியின்றி நடக்கத் தொடங்கியது. காங்கிரஸ் மூத்த எம்பி சசிதரூர் பட்ஜெட் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

* அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம்
பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘உணர்வுகளில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான், இந்தியாவின் அனைத்து அரசியலமைப்பு பதவிகளையும் பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள். இது என்ன மாதிரியான சிந்தனை? இந்த நாடு, ராகுல் காந்தியையும், காங்கிரசையும் அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்றார்.

Tags : House ,New Delhi ,Lok Sabha ,Speaker ,Om Birla ,Congress ,
× RELATED தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு