மஹா சிவராத்திரியை ஒட்டி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்குறிச்சி மஹாதேவர் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் எம்எல்ஏவும், பாஜ மாநில செயற்குழு உறுப்பினருமான விஜயதரணி நேற்று வந்திருந்தார். அதே நேரத்தில் தற்போதைய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டும் அங்கு வந்திருந்தார்.
அப்போது பேசிய விஜயதரணி, ‘‘கடந்த 3 மாதங்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். திக்குறிச்சி சாலை போடப்படாமல் இருக்கிறது. இதை பற்றி எந்த தலைவர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்கள். இன்றைக்கு நான் இங்கு வருகிறேன் என்பது தெரிந்த உடன், இங்குள்ள சட்டமன்ற பிரதிநிதி சாடிக்குதித்து வருகை தந்து அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றெல்லாம் போட்டி போட்டு கொண்டிருப்பதை பார்க்கும் போது விந்தையாக இருக்கிறது’’ என்றார்.
அதற்கு தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, ‘‘கடந்த 13 வருடங்களாக அவர் தான் எம்எல்ஏவாக இருந்தார். ஏன் இதை சரி செய்யவில்லை. இன்றைக்கு நாங்கள் சரி செய்கிறோம். 13 வருடங்கள் எங்கள் காங்கிரஸ் கட்சியின் பெயரை சொல்லி இருந்தவர் என்ன வளர்ச்சி பணியை செய்தார். விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டால் அது அவர்கள் கட்சி அவருக்கு கொடுக்கும் அங்கீகாரம். அவர் நிற்கட்டும். அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இன்றைக்கு மக்களை சந்திக்கிறார் என்றால் 13 ஆண்டுகளாக மக்களை சந்திக்காதவர் இன்றைக்கு திடீரென வந்து மக்களை சந்திக்கிறார் என்றால் மக்கள் ஏற்றுகொள்வார்களா. அவரை இன்று நேரில் பார்த்த போது எனக்கு கஷ்டமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஒரு முகமாக எவ்வளவு செழிப்பாக முக மலர்ச்சியுடன் இருந்த ஒரு ஆள் இன்றைக்கு எங்களை எல்லாம் பார்க்கும் போது கூச்சமாகத்தானே இருக்கும். பாஜவில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டி இப்படி நாடகம் போடுகிறார்’’ என்றார்.
