- ராகுல் காந்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- தில்லி
- காங்கிரஸ் கட்சி
- திமுக
சென்னை: தமிழக காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுடன் டெல்லியில் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார். பேரவை தேர்தல் தொடர்பாக கருத்துகளை கேட்டு, மூத்த தலைவர்களுடன் விவாதித்தார். வேட்பாளர்கள் தேர்வை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க கூட்டணி தலைமையை கேட்டு வருகிறது. இதற்காக திமுகவில் குழு அமைத்த உடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தியது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 77 மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் சட்டமன்ற தேர்தலில் எப்படி இருக்க வேண்டும், தேர்தல் பணிகளை எவ்வாறு தீவிரப்படுத்த வேண்டும் என்பது குறித்து இக் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், ஒரு சில மாவட்ட தலைவர்கள் தேர்தல் தொடர்பான தங்கள் கருத்துகளை ராகுல்காந்தியிடம் நேரடியாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின்பு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வேட்பாளர்கள் தேர்வை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* தலைமை சொன்னதை முதல்வரிடம் தெரிவிப்போம்-செல்வப்பெருந்தகை
கூட்டத்தை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேசிய தலைமை கூறியதை நாளை அல்லது நாளை மறுதினம் முதல்வரை நேரில் சந்தித்து தெரிவிக்க உள்ளோம். தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி வடிவம் பெறாத காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் வருகையில் காலதாமதமாகிறது. மற்றவர்கள் சொல்வதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழக முதல்வர் சொல்வது தான் இறுதியானது’’ என்றார்.
* தொகுதி பங்கீடு பேச்சை விரைவில் தொடங்க வேண்டும்-கிரிஷ் சோடங்கர்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், ‘‘தேர்தல் நடைபெறுவதற்கு குறைந்த நாட்களே இருப்பதால் விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும். எனவே, திமுக விரைவில் குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்’’ என்றார்.
