‘‘இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். அந்த நாடுகளிடையே சமாதானம் செய்தேன்’’ என அவ்வப்போது அள்ளி விடும் அமெரிக்க அதிபர் டிரம்ப் போல, தனது நத்தம் தொகுதியில் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம், ‘நான்தான் கொண்டு வந்தேன்’ என இஷ்டத்துக்கு பேசி வருகிறார் அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடையும் வகையில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, நத்தம் பேரூர் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில், நத்தம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு, மின் மயானம், உயர் கல்வி பயின்ற மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற தங்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் அறிவுசார் மையம் அமைப்பது என்பது உட்பட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, நத்தம் அரசு கல்லூரியை நிரந்தரமான இடத்தில் அமைத்திட நத்தம் பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை தானமாக கல்லூரி கட்ட வழங்கியுள்ளார்.
அதில் ரூ.18.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திமுக அரசு உறுதியளித்தபடி திட்டத்தை துவக்கியது நத்தம் தொகுதி மக்களிடையெ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் நத்தம் தொகுதியின் எம்எல்ஏவாகவும், அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த நத்தம் விஸ்வநாதன், மாவட்டத்தின் பின்தங்கிய தொகுதியான நத்தத்தில், அதிகாரத்தில் இருந்தபோதும், தற்போது எம்எல்ஏவாக இருந்தும் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, தொகுதிக்குள் உயர்கல்விக்கான எந்தவித வசதியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக தற்போது திமுக ஆட்சியில் நத்தம் தொகுதியில் அரசு கல்லூரியை கொண்டு வந்து, மாணவ, மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில், ‘நத்தம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைய நான் தான் காரணம்’ என மேடைகள்தோறும் பேசி வருகிறார்.
நத்தம் விஸ்வநாதனின் இந்த பேச்சுக்கு திமுகவினர் மட்டுமின்றி தொகுதி மக்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ‘யார் பிள்ளைக்கு, யார் பெயர் வைப்பது’ என்பதைப் போல, திமுக அரசால், திமுக பேரூராட்சி தலைவர் தானமாக கொடுத்த நிலத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியை, நான் தான் கொண்டு வந்தேன் என நத்தம் விஸ்வநாதன் கூறுவதை அதிமுகவினரே ரசிக்கவில்லையாம். ‘எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்தபோது, நம்ம அண்ணன் நத்தம் அரசு கலைக்கல்லூரி குறித்து சிறிது கூட சிந்திக்கவில்லை. கல்லூரிக்காக சிறு துரும்பைக் கூட எடுத்து போடல… இப்ப கல்லூரி அமைந்து மக்களின் வரவேற்பை பெற்றதும், கல்லூரி அமைய நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பை போல அள்ளி விடுகிறாரே…’’ என வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டனர்.
* என்டிஏ கூட்டணிக்கு தலைமை யார் என்பதில் குழப்பமா? பாபு முருகவேல், அதிமுக செய்தி தொடர்பாளர்
1. என்டிஏ கூட்டணி அதிமுக தலைமை என்று எடப்பாடி சொன்னாலும், கூட்டணி குறித்து பேச்சு, தொகுதி பங்கீடு பாஜ தலைமையில்தான் நடக்கிறது. ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து வந்த கூட்டணி பேச்சு, கடந்த சில தேர்தல்களாக பாஜ சொல்லும் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறதே ஏன்?
உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவராக இருக்கிற நிதின் நபின், பாரதிய ஜனதா இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களிலும் கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. மாறாக தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ பயணிக்கிறது என்று பல செய்தியாளர்கள் சந்திப்பிலேயும், பல பொதுக்கூட்ட மேடைகளிலேயும் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி இதை ஒரு பேசுபொருளாக ஆக்க வேண்டுமா?
2வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக, பாஜ தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், அதிமுக தலைமையில் இருந்த கட்சிகள் திமுக கூட்டணிக்கு சென்றுவிட்டது. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர்.
2. எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லாததால் இவர்கள் மாறினார்களா?
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றிருக்கிற தலைவர்கள் தனிநபர் விமர்சனத்தின் காரணமாகவும், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவும் விலகிச் சென்றிருக்கிறார்கள். அதேபோல, எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் ஒரு நபர் விலகிச் செல்வதனால் அந்த இயக்கத்திற்கு துளியளவு கூட பாதிப்பு ஏற்பட்டுவிடாது. காரணம், இயக்கம் என்பது நிரந்தரமானது. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், அது எந்தவித தாக்கத்தையும் ஒரு இயக்கத்திற்கு ஏற்படுத்திவிடாது. பலமான கூட்டணியா இல்லையா என்பதை தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
3. தொகுதி பங்கீட்டில் அதிமுகவுக்கான தொகுதிகளை மட்டும் கொடுத்துவிட்டு, மற்ற கட்சிகளுக்கு பாஜவே தொகுதிகளை ஒதுக்க உள்ளதாக பேச்சுவார்த்தை நடக்கிறதாமே?
இந்த பேச்சுக்கான கருத்து. அதிமுகவின் தலைவராக இருக்கிற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அல்லது பாஜவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அல்லது பாஜவின் தேசிய தலைவர் நிதின் நபின் எந்த இடத்திலும் இது போன்ற கருத்தைச் சொல்லவில்லை. சொல்லாத ஒரு கருத்துக்கு ஊடகங்கள் மூலமாக கேள்வி கேட்பதும், அந்த கேள்விக்கு ஊடகங்கள் மூலமாக பதில் சொல்வதும் நியாயமாக இருக்காது. அதுபோன்ற ஒரு நிலை நிச்சயமாக இருக்காது. அதிமுகவைப் பொறுத்தவரையில் வெற்றி, தோல்வி என்பது கூட்டுப் பொறுப்பு. வெற்றி பெற்றாலும் அனைத்துக் கட்சிகளுக்குமான பொறுப்பாக நாங்கள் கருதுவோம். வெற்றி வாய்ப்பை நாங்கள் இழந்தாலும் அனைத்துக் கட்சிக்குமான பொறுப்பாகத்தான் நாங்கள் சொல்வோமே தவிர, ஒரு கட்சியின் மீது பழி போட்டுத் தப்பிக்கிற இயக்கம் அதிமுக அல்ல.4மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் என்டிஏ ஆட்சி என்கிறார்கள். பாஜவினர் அமைச்சர்களாக வருவார்கள் என்று நயினார் சொல்கிறார். ஆனால், எடப்பாடி மற்றும் அதிமுக தலைவர்கள் அதிமுக ஆட்சி என்று சொல்கிறார்கள்.
4. யார் தலைமையில் ஆட்சி என்ற பெரும் குழப்பம் கூட்டணிக்குள் நிலவுகிறதே?
நயினார் நாகேந்திரன் பேட்டியிலே கூட நீங்கள் இன்னொன்றைக் கவனிக்கலாம். ‘மக்கள் முடிவு செஞ்சா, தேர்தலுக்கு அப்புறம்…’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அதை நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதே நயினார் நாகேந்திரன், ‘அதிமுக-வின் பொதுச்செயலாளர்தான் முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற கருத்தையும் பல பேட்டிகளிலே, பல பத்திரிகையாளர் சந்திப்பிலே சொல்லியிருக்கிறார். இதில் எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எடப்பாடியார்தான் முதலமைச்சர் வேட்பாளர். அதிமுக தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் தேவையில்லை.
