×

தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும்: பொய், அடாவடித்தனம் அரசியல் செய்யும் மோடி; இந்திய கம்யூனிஸ்ட் தாக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உரையாற்றினர். அவ்வுரைகள் முரண்பாடுகளும், குழப்பங்களும் வாய்ச்சவடால்களும் நிரம்பி வழிந்தவையாக இருந்தன. அதிமுக – பாஜ கூட்டணி என எடப்பாடி பழனிசாமியும், அவரது கட்சியினரும் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும் அவ்வாறே அக்கூட்டத்தில் பேசியதோடு, அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் மோடியோ, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும், அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு அமையும் என பேசினார். இவை, கூட்டணியின் பெயர் குறித்தும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்தும் அக்கட்சிகளிடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த முரண்பாடு குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என பிரதமர் மோடி பேசியது குறித்தும், அதிமுகவினர் வாய் மூடி மவுனிகளாக உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து 2025ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கான, நிவாரண நிதியாக ரூ.24 ஆயிரத்து 679 கோடி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் கேட்கப்பட்டது. ஆனால், கேட்கப்பட்ட நிதியில் வெறும் 17 சதவீத நிதியை மட்டுமே ஒன்றிய மோடி அரசு வழங்கியது. மோடி அரசின் இந்த பாரபட்சப் போக்கையும் வன்மத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடவில்லை. மேலும், பிஎம்  கல்வி திட்டத்தையும் ஏற்கும்படி நிர்பந்தித்து, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2401 கோடியை கொடுக்க மறுத்து வரும் ஒன்றிய அரசின் அடாவடித்தன அரசியலுக்கு, தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும்.

மேலும் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் வழக்கத்தை மாற்ற நடக்கும் முயற்சிகளையும், அதற்கு தமிழர்கள் வணங்கும் கடவுளான முருகனை பயன்படுத்துவதும் அப்பட்டமான வகுப்புவாதப் பரப்புரையாகும். நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு, பேசும் பொறுப்பற்ற பேச்சாகும். மொத்தத்தில் மதுரை தேர்தல் பரப்புரை கூட்டம் பொய்யும், புனைச்சுருட்டும் நிறைந்த வெற்று முழக்கங்களாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Modi ,Communist Party of India ,State Secretary ,M. Veerapandian ,National Democratic Alliance Party ,Madurai ,
× RELATED நாம ஒன்னும் விஐபி கிடையாது; பிரசார...