×

வானதியை திட்டிய பியூஸ் கோயல்: வீடியோ வைரல்

மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன், பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சிபாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிறைய பேர் பஸ், கார்களில் வந்தனர். இதனால், பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் திணறியது. அப்போது அங்கு வந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், போக்குவரத்து நெரிசலை பார்த்து காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது பிரசார மேடையை நோக்கி பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ காரில் வர முயன்றார்.

அவரது வாகனத்தை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தடுத்து நிறுத்தினார். அவரிடம், நாம ஒண்ணும் விஐபி கிடையாது என பியூஸ் கோயல் கோபத்துடன் கடிந்து கொண்டார். பதிலுக்கு வானதி சீனிவாசனும் ஏதோ பேசினார். அப்போது பியூஸ் கோயல் திடீரென அவரை பார்த்து முறைத்தார். தொடர்ந்து, அங்கிருந்து வானதி சீனிவாசன் நடந்தே பிரசார மேடைக்கு சென்றார். வானதி சீனிவாசனை பார்த்து பியூஸ் கோயல் கோபத்துடன் கடிந்து கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

* கன்டெய்னரில் வரும் பரிசு பொருட்கள்: பதுக்கும் அதிமுக நிர்வாகிகள்
ஜெயலலிதா பிறந்தநாள் என்ற பெயரில் அதிமுக சார்பில் ஹாட் பாக்ஸ், குடை, தட்டு, சேலை, சட்டை துணி, வேஷ்டி, வாட்டர் பாட்டில் உட்பட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இந்தாண்டு மட்டும் தேர்தலை குறி வைத்து பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதன் மூலம் வாக்குகளை கவர் செய்ய முடியும் என்று கருதும் அதிமுகவினர்க்கு இந்த பரிசு பொருள் தொகுப்பு விநியோகமானது எதிராகவே திரும்பி உள்ளது. கோவையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கன்டெய்னர் லாரிகளில் பரிசு பொருட்கள் சமீபத்தில் வந்து இறங்கியது.

அதனை விநியோகம் செய்ய அந்தந்த வார்டு நிர்வாகிகள் டோக்கன் கொடுத்து வருகின்றனர். டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டால் வீட்டில் அதிக ஓட்டு உள்ளவர்களுக்கே முன்னுரிமை என வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வர சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார்களாம். ஆனால் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் வீடு தேடி சென்று பொருட்களை கொடுத்து வருகின்றனர். அதேபோல டோக்கன் பெற்றவர்களுக்கு முழு அளவில் பொருட்களை கொடுக்காமல் அந்தந்த வார்டு நிர்வாகிகள் தங்கள் இஷ்டம் போல பதுக்கி கொள்வதால் அதிமுக.,வினர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் வசைபாடி வருகின்றனர். பரிசு பொருட்களை கொடுத்து வாக்குகளை கவர் செய்யலாம் என்று நினைத்திருந்த அதிமுகவிற்கு பரிசு தொகுப்பு நடவடிக்கையானது எதிராகவே திரும்பி உள்ளது.

Tags : Piyush Goyal ,National Democratic Alliance ,Mandela Nagar ,Madurai ,Modi ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Union Ministers ,L. Murugan ,BJP ,
× RELATED நாம ஒன்னும் விஐபி கிடையாது; பிரசார...