×

இலை கட்சியில் நடக்கும் களேபரம்; மாஜி, சிட்டிங்குடன் மல்லுக்கட்டும் பிசினஸ்மேன், இன்ஜினியர்

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என 6 தொகுதிகள் உள்ளன. இவற்றில் பரமத்திவேலூர், குமாரபாளையம் அதிமுக வசம் உள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ராசிபுரம், திருச்செங்கோடு தொகுதிகளை குறிவைத்து பாஜ காய்நகர்த்தி வருகிறது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக மாஜிக்களும், தொழிலதிபர்கள் சிலரும் மல்லுக்கட்டி வருகின்றனர். இதில் நாமக்கல் ெதாகுதியை பொறுத்தவரை வர்த்தகர் அணி பொறுப்பில் இருக்கும் தொழிலதிபர் ஸ்ரீதேவிமோகன் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். மாநகர ெசயலாளர் பாஸ்கரை தவிர்த்து, இவருக்கு சீட் வழங்க மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் தங்கமணி ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான பாஸ்கரோ, கட்சியின் பொதுச்ெசயலாளர் எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி சந்தித்து, தனக்குத்தான் சீட் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து காய்நகர்த்தி வருகிறார்.

இந்தநிலையில் நாமக்கல் தொகுதியை குறிவைத்திருக்கும் தொழிலதிபர் ஸ்ரீதேவிமோகன், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குறித்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், ‘‘சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்று கூறிக்கொள்பவர் கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆபீசில் நடக்கும் கூட்டம் என்று எதிலும் கலந்து கொள்வதில்லை. 6 மாதத்திற்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர், 3 மாதமாக நான்தான் வேட்பாளர் என சொல்லிக்கொண்டு திரிகிறார். அவரை நம்பி 10-15 பேர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். பொதுச்செயலாளர், வேட்பாளரை அறிவிக்கும் முன்பே, இவர் கூறிக்கொள்கிறார். அவர் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும். ஆனால் நான்கரை ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து சொந்த பணத்தை செலவளித்து கட்சி பணியாற்றிய நீங்கள், அவரிடம் ஏமாறக்கூடாது.

நமது மாவட்ட செயலாளர் பொறுமையானவர். ஆனால் எப்போதும் பொறுமையாக இருக்கமாட்டார். சமீபத்தில் எடப்பாடி, சேந்தமங்கலம் வந்தபோது கூட காய்கறி, பழங்களுடன் 200பேரை மிகவும் சிரமப்பட்டு கொல்லிமலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சிக்காரர்கள் எல்லாம் நிறையபேர் இங்கே உள்ளனர். எனவே பொதுச்செயலாளரிடமும், மாவட்ட செயலாளரிடமும் ஒரேயொரு வேண்டுகோள் வைக்கிறேன். கட்சிக்கு நேர்மையாக, உண்மையாக, விசுவாசமாக உழைப்பவர்களுக்கு சீட் வழங்க வேண்டும்’’ என்று அவர் கொளுத்திப்போட்டுள்ளது தான், இப்போது நாமக்கல் மாவட்ட அதிமுகவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சந்திரசேகரன். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதன்பிறகு ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரைத்தான் கடுமையாக விமர்சித்து ஸ்ரீதேவிமோகன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற ெதாகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் இலைக்கட்சியில் பெரும் மல்லுக்கட்டு நிலவுகிறது. இத்தொகுதி சிட்டிங் எம்எல்ஏ.வாக இருப்பவர் பி.ஆர்.ஜி.அருண்குமார். இவர், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர்தான், இத்தொகுதியில் மீண்டும் களம் இறங்குவார் என இலைக்கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இத்தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன் என இன்ஜினீயர் சந்திரசேகர் என்பவர் மல்லுகட்டுகிறார். இவர், எம்ஜிஆர் இளைஞர் அணி மா.செ.வாக இருக்கிறார். அத்துடன், மாஜி அமைச்சர் வேலுமணிக்கு ரொம்பவே நெருக்கமானவர். கட்சிக்குள் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக இவர், கடந்த இரண்டு ஆண்டாக கட்சியை விட்டு விலகி இருந்தார்.

ஆனால், வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை. மொத்தமாக ‘சைலண்ட் மோட்’-ல் இருந்தார். இவரை, மாஜி அமைச்சர் வேலுமணி தான் மீண்டும் கட்சிக்குள் இழுத்து கொண்டுவந்துள்ளார். அப்போது, ‘‘உனக்கு மாநகர் பகுதியில் ஏதாவது ஒரு தொகுதியை பெற்றுத்தருகிறேன்… எம்எல்ஏ.வாகவும் ஆக்கி விடுகிறேன்..’’ என வாக்குறுதி அளித்துள்ளார். அதன்படி, எனக்கு கவுண்டம்பாளையம் தொகுதியை பெற்றுத்தாருங்கள் என அடம் பிடிக்கிறாராம். அதனால், ஜெயிக்கப்போவது யாரு…? என்கிற எதிர்பார்ப்பு இலைக்கட்சிக்குள் பலமாக எழுந்துள்ளது.

Tags : Leaf Party ,Namakkal ,Rasipuram ,Senthamangalam ,Paramathevellur ,Thiruchengode ,Kumarapalayam ,AIADMK ,BJP ,
× RELATED தேர்தல் தேதி அறிவித்தபின் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் விரக்தி