×

சேலத்தில் மேளம் அடித்து டான்ஸ் ஆடிய விவகாரத்தில் மோதல்; 10 பேர் அதிரடி கைது ரவுடி உள்பட 5பேருக்கு வலை

சேலம், பிப்.11:சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியில் வாடிகிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் விஜய்(39). மேளம் அடிக்கும் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை அவரது மகன் மற்றும் நண்பர்களுடன் முனியப்பன் கோயில் அருகில் மேளம் அடித்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சண்முகம், தினேஷ், சூர்யா, கதிரவன் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். மதுபோதையில் இவர்கள் மேளத்திற்கு டான்ஸ் ஆடியுள்ளனர். இவர்கள், விஜய் தரப்பினர் மீது இடித்து இடித்து டான்ஸ் ஆடியதாக தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 4 பேரையும் அடித்து துரத்தி விட்டுள்ளனர்.இதனால் கோபம் அடைந்த சண்முகம் தரப்பினர் நண்பர்கள் 15 பேரை அழைத்துக்கொண்டு அன்று இரவு சென்று மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்பினரும் காயம் அடைந்த நிலையில் கிச்சிப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் காயம் அடைந்த மேளக்காரர் விஜய் கொடுத்த புகாரின்பேரில், லட்சுமணன்(25), முகமது ஆசாத்(19), குகன்(எ)மணிகண்டன்(23), கவுதம்(24), சுஜய்(20), இம்ரான்(23), கார்த்திக்(20) மற்றும் 18 வயதான 3 பேர் என மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரவுடிகள் உள்பட 5பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem ,Vadigaramam ,Sannyasigundu ,Kichipalayam, Salem ,Vijay ,Muniyappan temple ,
× RELATED சேலம் வீராணத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி