×

பாஜவின் அழுத்தத்தில் உள்ளார் சபாநாயகர் மக்களவைக்கு பிரதமர் மோடி வராததற்கு பயமே காரணம்: காங். பெண் எம்பிக்கள் கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடி மக்களவை வருகை தவிர்ப்புக்கு அவரது பயமே காரணம் என்றும், பாஜவின் அழுத்தத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பதாகவும் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரியங்கா காந்தி, ஜோதிமணி, ஆர் சுதா, வர்ஷா கெய்க்வாட் மற்றும் ஜோத்ஸ்னா மஹந்த் உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரும் பேச அனுமதிக்கப்பட வேண்டும். அதன் பிறகு பிரதமர் பதிலளிப்பார் என்பது நாடாளுமன்றத்தின் மரபு. ஆனால், கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவையில் பேச வேண்டுமென்றே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாதது. நியாயப்படுத்த முடியாதது.

மறுபுறம், ஆளும் கட்சியின் தூண்டுதலால் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் பாஜ எம்பி ஒருவர் முன்னாள் பிரதமர்களை பற்றி ஆபாசமாக, அருவருப்பான முறையில் பேச அனுமதிக்கப்பட்டார். பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு பதிலுரை ஆற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் அனைத்து எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் எழுந்து நின்றனர். ஆனால் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. அடுத்த நாள், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதி செய்யப்பட்டதாக நீங்கள் (சபாநாயகர்) அறிக்கை அளித்தீர்கள்.

பிரதமர் மோடியின் மக்கள் விரோத அரசுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி, அவரிடம் பொறுப்புக்கூறலைக் கோரியதால் மட்டுமே நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். அவையில் அவர் வராதது எங்களால் ஏற்பட்ட எந்த அச்சுறுத்தலினாலும் அல்ல, அவரது பயத்தினால் அவைக்கு வரவில்லை. பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சியை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை. நாங்கள் வன்முறை மற்றும் மிரட்டலில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. மிரட்டல்களால் அமைதியாக்க முடியாத துணிச்சலான பெண் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள்.

ஆனால், சபாநாயகராகிய நீங்கள் ஆளும் கட்சியின் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்களவையின் சபாநாயகராகவும், அரசியலமைப்புப் பாதுகாவலராகவும் இருக்கும் நீங்கள், ஆளும் கட்சியால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த, குறிப்பாக காங்கிரசை சேர்ந்த பெண் எம்பிக்களுக்கு எதிராகப் பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்களவையின் பாரபட்சமற்ற பாதுகாவலராகச் செயல்படுமாறு உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியில் நாங்கள் உங்களுடன் உறுதுணையாக நிற்போம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Speaker ,BJP ,PM Modi ,Lok Sabha ,Congress ,New Delhi ,Modi ,Om Birla ,Priyanka Gandhi ,Jyotimani ,R Sudha ,
× RELATED சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: ராகுல் காந்தியின் கேரள பயணம் ரத்து