×

மாநிலங்களவையில் தாக்கல் மத்திய ஆயுதப் படைகளுக்கான விதிகளை ஒழுங்குபடுத்த சட்டம்: என்ஜிஓக்களின் சொத்துக்களை நிர்வகிக்க புதிய சட்ட திருத்தம்

புதுடெல்லி: சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப், ஐடிபிபி மற்றும் எஸ்எஸ்பி ஆகிய மத்திய ஆயுத காவல் படைகள் அந்தந்த படைகளுக்கென உள்ள தனிச் சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விதிகளை ஒழுங்குபடுத்த மத்திய ஆயுத காவல் படைகள் பொது நிர்வாக மசோதாவை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, மத்திய ஆயுதப் படையில் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் போது, ஐஜி அந்தஸ்தில் 50 சதவீத பணியிடங்களும், ஏடிஜிபி அந்தஸ்தில் 67 சதவீத பணியிடங்கள் டெபுடேஷன் மூலமாக நிரப்பப்படு வேண்டும். டிஜி மற்றும் சிறப்பு டிஜி பணியிடங்கள் டெபுடேஷன் மூலம் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். இந்த மசோதா மூலம் அனைத்து படைகளுக்கும் தனித்துவமான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதே போல, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா, வெளிநாட்டு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை கடுமையாக்கும். மேலும், உரிமம் இழக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை நிர்வகிக்க புதிய ஆணையத்தை உருவாக்கவும் பரிந்துரைக்கிறது. இந்த மசோதா ஆபத்தானது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் நித்யானந்த் ராய், ‘‘வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் இது உண்மையிலேயே ஆபத்தானது’’ என்றார்.

* திருநங்கையர் உரிமைகள் சட்ட திருத்தம் நிறைவேறியது
திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. சுயமாக பாலின அடையாளத்தை உணரும் உரிமையை நீக்கும் இந்த மசோதாவில் மருத்துவ ஒப்புதலின் அடிப்படையில் திருநங்கைகளுக்கான உரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட திருநங்கையர்களின் பல உரிமைகளை பறிக்கும் வகையிலான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறிய அத்தனை திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், மசோதாவை தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டுமென கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.

Tags : Rajya Sabha ,New Delhi ,Central Armed Police Forces ,CRPF ,CISF ,BSF ,ITBP ,SSP ,Union Cabinet ,
× RELATED சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: ராகுல் காந்தியின் கேரள பயணம் ரத்து