கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்.9 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் முடிந்து விட்டது. நேற்று முன்தினம் மனுபரிசீலனை நடந்த போது இதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா போட்டியிடும் ஜலுக்பாரி தொகுதி உட்பட, மூன்று காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பர்பேட்டா, தேகியாஜூலி தொகுதியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பர்பேட்டா காங்கிரஸ் வேட்பாளர் மகாநந்த சர்க்காரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதே சமயம் தேகியாஜூலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 10 வேட்பாளர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் செல்லத்தக்கவை என உறுதி செய்யப்பட்டன. பர்பேட்டா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மகாநந்த சர்க்காரின் மனுவில் ‘படிவம் ஏ’யில் கட்சித் தலைவரின் கையொப்பம் இடம்பெறாத காரணத்தினால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
