×

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு துபாயின் புர்ஜ் கலிஃபாவில் உள்ள ரூ.1,700 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: சட்டீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், மற்றும் அவரது கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே சவுரப் சந்திரகர், ரவி உப்பல், விகாஸ் சபாரியா, சந்திரபூஷன் வர்மா, சதீஷ் சந்திரகர் உள்ளிட்ட 14 பேர் அடங்கிய 197 பக்க முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சட்டீஸ்கரை சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மகாதேவ் ஆன்லைன் புக் என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஹவாலா சகோதரர்கள் அனில், சுனில் தம்மானி, சதீஷ் சந்திரகார் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சந்திரபூஷன் வர்மா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 4 குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.2,295.61 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு அல்லது பறிமுதல் செய்யப்பட்டு அல்லது இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் சந்திரகர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சிலும், மற்றொரு உரிமையாளரான ரவி உப்பல் வானுவாட்டிலும் உள்ளனர். அவர்களை நாடு கடத்தி இந்தியா அழைத்து வரும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் சவுரப் சந்திரகருக்கு சொந்தமாக துபாயில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று பறிமுதல் செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் உள்ள பல விலை உயர்ந்த வீடுகள் உள்ளிட்டவற்றை முடக்க பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Tags : Dubai ,Burj Khalifa ,Enforcement Directorate ,New Delhi ,Saurabh Chandrakar ,Chhattisgarh ,Ravi Uppal ,Mahadev ,
× RELATED மாநிலங்களவையில் தாக்கல் மத்திய...