விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டபேரவை தொகுதிகளில் திருக்கோவிலூர் பாஜவின் வாக்கு வங்கி கணிசமாக உள்ள தொகுதியாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தொகுதி, மாஜி எம்எல்ஏக்கள் கலிவரதனும், ஏஜி சம்பத்தும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியாகும். இருவருமே தற்போது பாஜவில் ஐக்கியமாகி உள்ளனர்.
கலிவரதன் பாமகவில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் இல்லையென்று திமுகவில் இணைந்த அவர், பின்னர் பாஜவிற்கு தாவினார். தன் செல்வாக்கை பயன்படுத்தி 2 முறை மாவட்ட தலைவர் பதவியை வகித்தார். ஆனால் அந்த காலக் கட்டத்தில் இவர்மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
குறிப்பாக பெண் நிர்வாகிகளுக்கு இரவில் போன் செய்வது, அநாகரிகமாக பேசுவது என்று காவல் நிலையத்திலும், கட்சி தலைமைவரையும் புகார் சென்றது. இவரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஏஜி சம்பத்தும் பாஜவில் இணைந்து மாநில துணைத்தலைவர் பதவியை பெற்றார். இருவருக்குமே கட்சியில் யார் பெரியவர் என்பதிலும், திருக்கோவிலூர் தொகுதியில் சீட்டு கேட்பதிலும் உட்கட்சி கோஷ்டி பூசல் கட்சி நிகழ்ச்சி மேடைவரை எதிரொலித்தது.
இந்நிலையில், பாஜவில் தலைவராக அண்ணாமலை இருக்கும்வரை ஏஜி சம்பத்தின் கை ஓங்கியிருந்த நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் வரவுக்குப்பிறகு அவர் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, இன்றைய ஆளும்கட்சியான திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கியது ஏஜி சம்பத்தின் தந்தை ஏ.கோவிந்தசாமி. 3 முறை எம்எல்ஏவாக இருந்து அப்போதைய அமைச்சரவையிலும் இடம்பெற்ற பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்தான்.
இதனால் திமுகவில் முகையூர் தொகுதியில் ஏஜி சம்பத்திற்கு 2 முறை வாய்ப்பு அளிக்கப்பட்டு எம்எல்ஏவாகவும் இருந்தார். ஆனால் அதன்பிறகு இந்த தொகுதி கூட்டணிக்கு ஒதக்கப்பட்டதால் தேமுதிகவிற்கு சென்ற அவர், பின்னர் மீண்டும் திமுகவிற்கு வந்து கடைசியில் பாஜவில் 2021ல் ஐக்கியமாகினார்.
அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, பெரிய பதவியை கட்சி மேலிடத்தில் சொல்லி வாங்கி கொடுப்பதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் கவர்னர் பதவி என்ற ஆசைகளையும் கூறிதான் கட்சியில் சேர்த்திருப்பதாக அப்போதே தகவல் கசிந்தன. ஆனால் எதிர்பார்த்த எந்த பதவியும் வழங்கவில்லை.
தற்போது புதிய மாநில தலைவர் மாற்றத்திற்கு பிறகு ஓரங்கட்டியே வைக்கப்பட்டுள்ளார். தற்போது, திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டு வருகிறார். இதனிடையே மற்றொரு மாஜி எம்எல்ஏவான கலிவரதனும் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், தனக்கு சீட்டு கிடைக்காவிட்டாலும் பாஜவில் வெளியூரிலிருந்த பிரபல வேட்பாளரை இங்கு களமிறக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
இதனால் இந்த தொகுதியில் இவர் மீது அதிருப்தியையும், உட்கட்சி பூசலையும் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அப்படித்தான், பிரதமர் மோடி வந்த நிழ்ச்சிக்கு செலவு செய்ய கொடுக்கப்பட்ட பணத் தகராறில் மாவட்ட தலைவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஏஜி சம்பத் இருப்பதாகவும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பெயரை டேமேஜ் செய்துள்ளார்கள்.
இதனை மீறி ஏஜி சம்பத் எப்படியாவது சீட்டுபெற முயற்சித்து வருகிறார். பலவகையில் தடைகள் இருப்பதால் வேறுவழியின்றி பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஏஜி சம்பத் இன்று எம்எல்ஏ சீட்டுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் திமுகவில் இன்றும் அவரது குடும்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் விழுப்புரத்தில் மணிமண்டபம், திருவுருவச்சிலை அமைத்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுகவிலேயே அவரது பயணம் தொடர்ந்திருந்தால் இன்று கையேந்தும் நிலைக்கு சென்றிருக்க மாட்டார், நிச்சயம் அவரின் அரசியல் எதிர்காலம் தலைதூக்கிதான் இருந்திருக்கும் எனக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்ட விஏடி கலிவரதனுக்கு திருக்கோவிலூர் தொகுதி சிறுவானூர் கிராமத்தில் ஓட்டு போடவில்லை, ஓட்டு குறைந்ததற்கான காரணம் கேட்டு அங்கு இருக்கும் நிர்வாகியிடம் போன் செய்து திட்டியதாகவும், வீட்டிற்கு கும்பலாக சென்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்ட புகாரில் கலிவரதன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அதே தொகுதியை சேர்ந்த பாஜ பெண் நிர்வாகி காயத்ரி என்பவரிடம் கட்சி பதவி தருவதாக பண மோசடி செய்ததாக கட்சி தலைமையில் புகார் அளித்திருந்தார். மேலும் பெண் நிர்வாகி ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க மறுத்தால் வீடியோ வெளியீட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசும் ஆடியோவும் வைரலானது.
தொடர்ந்து 2023ம் ஆண்டு அவதூறு வதந்திகளை பரப்பியதாகவும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோன்று மாவட்ட பாஜ தலைவராக இருந்தபோது அடுக்கடுக்கான புகாரில் சிக்கியவர்தான் கலிவரதன். இதில் யாருக்கு பாஜ சீட் கொடுக்கும் என்பதுதான் விழுப்புரம் மாவட்ட தாமரை கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
