தமிழக வாழ்வுரிமை கட்சியில் இளைஞர்கள் இணையும் விழா கும்பகோணம் சாரங்கபாணி கீழவீதியில் நடந்தது. இளைஞர்களை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசியதாவது: விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதோ, அவர் முதல்வராக கூடாது என்பதோ எனது பார்வை இல்லை.
அவர் திரைப்படத்தில் நடித்தார் என்பதற்காக 6 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் அரியாசனத்தை, தமிழ் இனத்திற்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடாத விஜய்க்கு வழங்குவார்களா?. அதுவும் அவர் கிங்மேக்கராக இல்லாமல், கிங் ஆகவே தான் இருப்பாராம். கரூரில் உயிரை பறி கொடுத்த உறவினர்களை வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதும், வீதியில் இறங்கி போராடும் துப்புரவு பணியாளர்களை என் வீட்டிற்கு வந்து உங்கள் குறைகளை கூறுங்கள் எனக்கூறுவதும் தமிழ் பண்பாடா, இதான் அரசியலா.
இதைத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர், நல்லகண்ணு போன்றோர் செய்தார்களா. தமிழ் சமூகத்தின் பெண்களும், இளைஞர்களும் உங்கள் பாட்டுக்கு ஆடினால், உங்களை விஜய் விஜய் என்று சொன்னால் உடனே முதலமைச்சர் ஆசை வந்துவிடுமா.
திமுக மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பொறுப்பிற்கு வந்துள்ளது என்பது, பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று, ரத்தம் சிந்தி, காவல்துறையினரிடம் அடி உதை வாங்கிய பிறகு மேயராகி, அமைச்சராகி, துணை முதல்வராகி பின்னர் முதல்வராக வந்துள்ளார். அவரை சி.எம் சார் என்றும், அங்கிள் என்றும் நையாண்டியாகவும், நக்கலாகவும் அழைப்பாயா.
வா களத்துக்கு வா. தமிழக விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, மீத்தேன் போன்ற நாசக்கார திட்டங்களுக்கு எதிராக எத்தனையோ தலைவர்கள் போராடி சிறை சென்றுள்ளார்கள். நீ அரசியல் பேசு, மக்களை சந்தி, ஓட்டு வாங்கு அது வேற விஷயம். ஆனால் மற்ற தலைவர்களை சவாலுக்கு அழைப்பது, நக்கல் செய்வது, நையாண்டி செய்வதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
