×

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் விரைவில் வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலை அறிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகள், தேமுதிகவுக்கு 10 தொகுதி, விசிகவுக்கு 8 தொகுதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 தொகுதி, மதிமுகவுக்கு 4 (3 உதயசூரியன் சின்னம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதி (ஏணி சின்னம்), மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதி (உதயசூரியன் சின்னம்), கொமதேகவுக்கு 2 தொகுதி (உதயசூரியன் சின்னம்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல எஸ்டிபிஐ கட்சி, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் ஆகிய 4 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் திமுக 164 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மதிமுக 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி- 2, கொமதேக- 2, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 11 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த வகையில் 175 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண்கிறது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பான பட்டியலை அந்தந்த கட்சிகள் சார்பில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவிடம் அளிக்கப்பட்டது. இந்த தொகுதிகள் தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழு கூட்டணி கட்களுடன் 3 நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர்கள் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். இதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அதேபோன்று திமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

தொடர்ந்து உடனடியாக அவரவர்களுக்கான தொகுதியில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் தேமுதிக வேட்பாளர்கள், மதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்றுக்குள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விசிக பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதியும், தமிமுன் அன்சாரியின் மஜக கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதியும், தமிழர் தேசம் கட்சிக்கு நத்தம் தொகுதியும் ஒதுக்கப்பட உள்ளது.

அவர்களும் ஓரிரு நாளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதேபோல கூட்டணி கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான பிரசார அட்டவணை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags : DMK alliance parties ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu Assembly elections ,
× RELATED நாங்கள் விரும்பிய தொகுதிகள்...