டெல்லி: மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவை ரூ.30,391 கோடி குறைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் உரையாற்றிய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம்; வேளாண், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.60,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.6,985 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.53,067 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஊரக பகுதிகளுக்கு எந்த வளர்ச்சியும் தேவையில்லையா? ஒன்றிய பாஜக அமைச்சர், அதிகாரிகள் ஆண்டு முழுக்க என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?
கிராமபுற சாலைத் திட்டத்துக்கு மட்டும் நடப்பாண்டில் ரூ.7,201 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியின் அளவை ரூ.30,391 கோடி குறைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மாநிலங்களை குறை சொல்லும் நீங்கள், ஏன் நிதி ஒதுக்க மறுக்கிறீர்கள்? பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஏன் என்று பிரதமர், அமைச்சர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும். 2025-26ல் ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.67,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெறும் ரூ.17,000 கோடி மட்டுமே செலவு. பாஜக ஆளும் ம.பி. இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரிழப்பு; ஆனால் குடிநீர் திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மக்கள் வாழும் கிராமத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாததால் இன்றுகூட 4 சகோதரிகள் தற்கொலை. ஆனால் ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.22,331 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான சாலைகள், வீடுகள் வேண்டாமா? வரலாற்றிலேயே இல்லாத அளவாக ஜிடிபி-யில் வெறும் 1.6% மட்டுமே பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு; அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.18,665 கோடி செலவு செய்யாமல் உள்ளது. நகர்ப்புற வளர்ச்சி துறை ரூ.39,573 கோடியை செலவிடாமல் வைத்துள்ளது.
நடப்பு பட்ஜெட்டில் சமூக மேம்பாட்டு துறைக்கு ரூ.9,999 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்யாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
