×

முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம்: தேர்தலில் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதை பெயருடையவர்களை நிறுத்துவது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவில் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயருடையவர்களை நிறுத்துவது வழக்கமாக உள்ளது. இதன் மூலம் பல தொகுதிகளில் முக்கிய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பறிபோன பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் திருப்பூணித்துறா தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் நடிகை அஞ்சலி நாயர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: வாக்குப்பதிவு எந்திரத்தில் என்னுடைய பெயரை அஞ்சலி, பி.வி. என சேர்ப்பதற்கு பதிலாக அஞ்சலி நாயர் என்று குறிப்பிட வேண்டும்.அஞ்சலி நாயர் என்றால்தான் வாக்காளர்களுக்கு என்னை தெரியும். அஞ்சலி என்ற பெயரில் வேறொரு வேட்பாளர் போட்டியிடுவதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாக்குப்பதிவு எந்திரத்தில் என்னுடைய பெயரை அஞ்சலி நாயர் என்று குறிப்பிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குஞ்சி கிருஷ்ணன் தன்னுடைய உத்தரவில் கூறியது: முக்கிய வேட்பாளருக்கு போட்டியாக அதே பெயரைக் கொண்ட வேட்பாளரை போட்டியிட வைப்பது ஜனநாயகத்தை கொல்வதற்கு சமமாகும். முக்கிய வேட்பாளருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் அவர் பிரசாரம் கூட செய்வது கிடையாது. கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளில் இதேபோல முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயரைக் கொண்டவர்கள் நிறுத்தப்படுகின்றனர். சட்டப்படி எல்லா இந்திய குடிமகன்களுக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது என்றாலும், பிரசாரத்திற்கு கூட செல்லாதவர்களை நிறுத்துவதற்கு வேட்பாளர்களின் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.அஞ்சலி நாயரின் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன் வரவேண்டும். இவ்வாறு நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும்...