- மேற்கு வங்கம்
- ஐயா
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- இந்திய தேர்தல் ஆணையம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்கம்...
புதுடெல்லி: நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் முறைகேடு நடப்பதாக கூறி திரிணாமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலானஅமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவர் கூறியதில், ‘‘இந்த விவகாரத்தில் இருக்கும் பிரச்னையை தீர்க்கும் விதமாக நீதித்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள புள்ளிவிவரங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் பணியின் போது முறையீடு செய்த 60 லட்சம் வாக்காளர்களில், 47 லட்சம் வாக்காளர்களின் ஆட்சேபனை மனுக்கள் மீது முடிவெடுத்துள்ளதாகவும், அதேபோன்று ஏப்ரல் 7ம் தேதிக்குள் அனைத்து ஆட்சேபனைகள் மீது முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து மம்தா பானர்ஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இ தேர்தல் ஆணையம் படிவம் 6ன் மூலம் புதிய வாக்காளர்களை அனுமதிப்பதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பாஜ கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களின் பெயர்கள் தான் சேர்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதில்,‘‘இந்த விவகாரம் தொடர்பாக படிவம் 6ன் பிரச்னை என்பது புதியது கிடையாது. இருப்பினும் அந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து என்று தனிப்பட்ட முறையில் விரிவாக விசாரணை நடத்தப்படும். தீர்ப்பாயங்கள் புதிதாக வரக்கூடிய புகார் மனுக்கள் மீதும் தொடர்ந்து விசாரணையை நடத்தலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
