×

பெரும்பான்மை கிடைக்கலன்னா… தவெகவுடன் பேச்சு நடத்தி என்டிஏ ஆட்சி அமைக்கும்: புது கதை சொல்லும் ஒன்றிய அமைச்சர்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, அசாமில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கிறது.

தமிழகத்தில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு அங்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு பாஜ ஆட்சி அமைக்கும். கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

அங்கும் பாஜ ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாகாலாந்து, மணிப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக எங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய அங்கீகாரம் கிடைக்க கட்சியை வலிமைப்படுத்தி வருகிறோம். நரேந்திர மோடி அரசாங்கம் திடமான முறையில் நாட்டை வளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : NDA ,Thaweka ,Ramdas Athawale ,Republican Party of ,India ,National Democratic Alliance ,Union Minister for Social Justice and Empowerment ,Puducherry ,
× RELATED ஆண்டுக்கு ரூ.150 கோடி செலவு: ஆந்திராவில்...