×

வெற்றியை ரத்து செய்யக் கோரி மனு சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ கூட்டணி வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான் கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவின் முதல் வெற்றியாகும். பின்னர் சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலா இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் சுரேஷ் கோபி தேர்தல் பிரசாரத்தின் போது மத சின்னங்களை பயன்படுத்தி ஓட்டு கேட்டதால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சுரேஷ் கோபி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை கேரள உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கவுசர், சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Suresh Gobi ,Kerala High Court ,THIRUVANANTHAPURAM ,BAJA ALLIANCE ,CANDIDATE ,BAJA ,KERALA ,Suresh Kobi ,Gas ,
× RELATED கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும்...