சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.2.2026) தலைமைச் செயலகத்தில், 2026 குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு கேடயங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற துறைகளுக்கு கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை, காமராசர் சாலையில் 26.1.2026 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் பள்ளி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், சென்னை, லேடி சிவகாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாம் பரிசும், தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகளுக்கு மூன்றாம் பரிசும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளில் சென்னை, கொளத்தூர், சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு முதல் பரிசும், சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு இரண்டாம் பரிசும், சென்னை, இராணிமேரி கல்லூரிக்கு மூன்றாம் பரிசும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து, குடியரசு நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கான முதல் பரிசிற்கான கேடயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு அவர்களிடம் வழங்கினார். அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இரண்டாம் இடம்பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான கேடயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் திரு.சத்யபிரத சாகு, இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் மூன்றாமிடம் பெற்ற காவல் துறைக்கான கேடயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) திரு.ஜி.வெங்கடராமன், இ.கா.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., ஆகியோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., பொதுத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) திரு. வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வே.மணிகண்டன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
