×

பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்

 

நாகப்பட்டினம்: இந்தியாவிலேயே கைவினைக் கலைஞர்களுக்கு அதிக விருதுகளை வாங்கி கௌரவிக்கும் மாநிலம் தமிழ்நாடு பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கினார் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்

தமிழ்நாட்டின் கலைப் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த பூம்புகார் நிறுவனத்தால் 4 நாட்கள் நடத்தப்படும் கைவினைக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை முதல்வர் அவர்கள் நேற்று தொடங்கி வைத்து, மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் வாழும் கைவினை பொக்கிஷ விருதினையும், 10 கைவினைக் கலைஞர்களுக்கு ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்கள்.

இன்று இந்த விழாவில் நடப்பாண்டு 2025-2026-க்கான, குழு உற்பத்தி விருதுகள் 3 குழுவிற்கு தலா ரூ. 40 ஆயிரம் ரொக்க பரிசும், 4 கிராம் தங்க பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது 3 நபர்களுக்கு தலா ரூ. 40 ஆயிரம் ரொக்க பரிசும், 4 கிராம் தங்க பதக்கம், தாமிரம் பத்திரம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது 85 நபர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ. 20 ஆயிரம், 50 கிராம் வெள்ளி நாணயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கான கைவினை விருது 150 இளைய கைவினைஞர்களுக்கு ரொக்க பரிசாக தலா ரூ. 10,000, 5 கிராம் வெள்ளி நாணயம், சான்றிதழ் என மொத்தம் 263 கைவினை கலைஞர்களுக்கு ரூ. 77 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலேயே, தமிழ்நாடு மட்டும் தான் ஆண்டுதோறும், கைவினை கலைஞர்களுக்கு அதிக விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பூம்புகார் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிவமைப்பு மற்றும் பயிற்சி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மின் வணிக இணையத் தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் புதிய விற்பனை நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடப்பாண்டு சட்டப்பேரவையில் அறிவித்தபடி இன்று வழங்கப்படும் பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதுக்கான ரொக்க பரிசு ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாகவும், 5 கிராம் வெள்ளிப் பதக்கம் 50 கிராமாகவும், அடுத்த தலைமுறை கைவினை விருதுக்கான ரொக்க பரிசு ரூ. 2,000 இருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 1973-ஆம் ஆண்டு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் – “பூம்புகார்” என்ற பெயரில் துவக்கப்பட்டு, 52 ஆண்டுகளாக கைவினைக் கலைஞர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகிறது. பூம்புகார் நிறுவனம், 7 உற்பத்தி நிலையங்கள் மற்றும் 25 விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் நேரடி விற்பனை, இணையதள விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் ரூ. 232 கோடியே 22 லட்சம் மதிப்பிலான கலை பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்ல பூம்புகார் நிறுவனத்தின் மூலம் பூவிசார் குறியீடுகள் பெற்று வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி, அரும்பாவூர் – மரச்சிற்பங்கள், தஞ்சாவூர், கருப்பூர் கலங்காரி – ஓவியங்கள், மாமல்லபுரம், மயிலாடி – கற்சிற்பங்கள், சுவாமிமலை பஞ்சலோக சிற்பங்கள், பத்தமடை பாய்கள் என 23 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டு பெற்று வழங்கப்பட்டுள்ளது. 10 கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கழக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டு காலத்தில் நலிந்த கைவினை தொழில்களுக்கு உதவிடும் வகையில், பல்வேறு வகையான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பொது வசதி மையங்கள் காஞ்சிபுரம், அரும்பாவூர், அம்பாசமுத்திரம், ஆசனூர், விக்கிரவாண்டி, பத்தமடை, தம்மம்பட்டி, காருகுறிச்சி ஆகிய 8 இடங்களில் ரூ. 4 கோடியே 80 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அமைப்பட்டுள்ள 14 பொதுவசதி மையங்கள் மூலம், 6 ஆயிரம் கைவினை கலைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த மையங்கள் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 520 இளம் தலைமுறையினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

கைவினைக் கலைஞர்கள் தங்களின் கலைப் பொருள்களை விற்பனை செய்ய கன்னியாகுமரியில் ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பிலும், மாமல்லபுரத்தில் ரூ. 4 கோடியே 70 லட்சம் மதிப்பிலும், நகர்புற கண்காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி -அய்யன் திருவள்ளுவர் சிலை, ஈரோட்டில் -Tex Valley வணிக வளாகம், சிவகங்கை – கீழடி அருங்காட்சியகம், திருநெல்வேலி-பொருநை அருங்காட்சியகம், ஆகிய இடங்களில் புதிய விற்பனை கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

கழக ஆட்சியில் 5 ஆண்டு காலத்தில் கைவினை கலைஞர்களின் உற்பத்திக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த 7 உற்பத்தி நிலையங்கள் ரூ. 3 கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பூம்புகார் நிறுவனமும், MSME துறையும் இணைந்து Micro cluster திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் ரூ. 9 கோடியே 74 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மரச்சிற்ப குழுமமும், மல்லியக்கரையில் ரூ. 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காட்சி அரங்கம் மற்றும் செயல்முறை விளக்க மையப் பணிகளும், இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

கைவினைக் கலைஞர்களின் திறமையை மேம்படுத்த கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பில், 750 கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் 960 நபர்களுக்கு, ரூ. 99 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கழக அரசால் சமுதாயத்தின் அனைத்து தரப்பு தொழில்முனைவோரும் பயனடையும் வகையில், கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பூம்புகார் நிறுவனத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ், 504 கைவினைக் கலைஞர்கள் ரூ. 2 கோடியே 52 லட்சம் மானியத்துடன் ரூ. 15 கோடியே 12 லட்சம் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தை கைவினைக் கலைஞர்கள் அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

2 நாட்களாக நடைபெற்ற இந்த கருத்தரங்கு கைவினைக் கலைஞர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். 4 நாட்கள் நடைபெறும் கண்காட்சி கைவினைக் கலைஞர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், கழக அரசு நிறைவேற்றி வரும் புதிய திட்டங்களை கைவினைக் கலைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் அரசு செயலர் அமுதவல்லி, IAS., ஒன்றிய அரசின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி வர்த்தக மண்டல மேலாளர் ஸ்ரீ தேவி, கைவினை பொருட்கள் அபிவிருத்தி ஆணையத்தின் தென்மண்டல அலுவலர் லஷ்மன் ராவ், பூம்புகார் நிறுவனத்தின் நிர்வாகக்குழு இயக்குநர்கள் ராஜா ஸ்தபதி, பன்னீர்செல்வம், பூம்புகார் நிறுவனத்தின் நிதி மேலாளர் விஜய ராஜ், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வர்த்தகர்கள், பூம்புகார் மாநில – மாவட்ட விருதுகள் பெற்ற கைவினை கலைஞர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Tags : Minister ,Tha.Mo. ,Anbarasan ,Poompuhar Handicrafts Exhibition ,Nagapattinam ,Tamil Nadu ,India ,Poompuhar Handicrafts Exhibition and ,
× RELATED குடியரசு நாள் விழா அலங்கார ஊர்திகளின்...