×

ரூ.1,238 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9,696 அடுக்குமாடி குடியிருப்புகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.2.2026) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,238.19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மீனவர் குடியிருப்பு திட்டப்பகுதியில் 75.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 520 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செனாய் நகர் பழைய பேருந்து நிலையம் திட்டப்பகுதியில் 67.87 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செனாய் நகர் நீச்சல்குளம் திட்டப்பகுதியில் 41.84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 280 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செனாய் நகர் நீச்சல்குளம் பகுதி – 2 திட்டப்பகுதியில் 8.34 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 56 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் 42.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மணலி புதுநகர் பகுதி – 7 திட்டப்பகுதியில் 30.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதி – 3 திட்டப்பகுதியில் 198.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1568 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் ரெட்டியார்பட்டி பகுதி – 2 திட்டப்பகுதியில் 134.08 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 876 அடுக்குமாடி குடியிருப்புகள்;சிவகங்கை மாவட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கழனிவாசல் பகுதி – 1 திட்டப்பகுதியில் 129.44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 672 அடுக்குமாடி குடியிருப்புகள், கழனிவாசல் பகுதி – 2 திட்டப்பகுதியில் 43.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 228 அடுக்குமாடி குடியிருப்புகள்;சேலம் மாவட்டம், காந்தி நகர், நேரு நகர், அல்லிக்குட்டை பகுதி – 1 திட்டப்பகுதியில் 102.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 972 அடுக்குமாடி குடியிருப்புகள், காந்தி நகர், நேரு நகர், அல்லிக்குட்டை பகுதி -2 திட்டப்பகுதியில் 31.11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 340 அடுக்குமாடி குடியிருப்புகள், திடீர் நகர் திட்டப்பகுதியில் 62.71 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 588 அடுக்குமாடி குடியிருப்புகள், அவ்வைநகர் திட்டப்பகுதியில் 32.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 336 அடுக்குமாடி குடியிருப்புகள்;

தேனி மாவட்டம், பொட்டல்களம் திட்டப்பகுதியில் 54.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 476 அடுக்குமாடி குடியிருப்புகள் வலசத்துரை திட்டப்பகுதியில் 29.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 252 அடுக்குமாடி குடியிருப்புகள்;ஈரோடு மாவட்டம், நாதிபாளையம் திட்டப்பகுதியில் 44.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 528 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குருவரெட்யூர் திட்டப்பகுதியில் 44.69 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 448 அடுக்குமாடி குடியிருப்புகள்;கோயம்புத்தூர் மாவட்டம், நேதாஜிபுரம் திட்டப்பகுதியில் 63.18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 720 அடுக்குமாடி குடியிருப்புகள்;
என மொத்தம் 19 திட்டப்பகுதிகளில் 1238.19 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 9,696 குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்,

இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர்வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 193 திட்டப் பகுதிகளில் 7984.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 67,907 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம்,இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிச் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., இணை மேலாண்மை இயக்குநர் திருமதி ந. ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறியாளர் திரு. வி.எஸ். கிருஷ்ணசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Mr. ,Tamil Nadu Urban Habitat Development Board ,Department of Housing and Urban Development ,
× RELATED குடிநீர் பாட்டிலில் மைக்ரோ...