புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் தனது தாயுடன் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். அப்போது அவர் மிகவும் இயல்பாக இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 3ம் தேதி அதிகாலை 6.15 மணியளவில் தனது அறைக்குள் சென்ற சார்த்தக், அதன் பிறகு மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
காலை 8.30 மணியளவில் கப்பல் அதிகாரி சோதனையிட்ட போது அவர் அறையில் இல்லாதது தெரியவந்ததால் கப்பலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சார்த்தக் மாயமானது குறித்துக் கப்பலில் உள்ள மற்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அன்று காலை 9.40 மணியளவில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது மொரிஷியஸ் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
