×

நீதிமன்றங்களில் 637 கோடி பக்க ஆவணங்கள் டிஜிட்டல் மயம் : ஒன்றிய அமைச்சகம் தகவல்

 

புதுடெல்லி: இந்திய நீதிமன்றங்களில் 637 கோடி பக்க ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக இ-கோர்ட்ஸ் எனும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தேசிய நீதித்துறை தரவு அமைப்பில் 26 கோடிக்கும் அதிகமான வழக்கு விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் காணொளி காட்சி மூலம் இதுவரை 2.8 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் அலைச்சலும் பணிச்சுமையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இம்மாதத் துவக்கம் வரை, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இருந்த பழைய ஆவணங்களில் 637 கோடி பக்கங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. காகிதமில்லா நீதிமன்றங்களை உருவாக்கும் மூன்றாம் கட்டத் திட்டத்திற்காக 7,210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெல்லி, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னோடித் திட்டமாகப் காகிதமில்லா நீதிமன்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும், வழக்கறிஞர்கள் எந்த இடத்திலிருந்தும் 24 மணி நேரமும் வழக்குகளைத் தாக்கல் செய்யவும் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது’ என்று ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : Union Ministry ,New Delhi ,Union Law Ministry ,
× RELATED நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு...