- ஆம் ஆத்மி கட்சி
- ஆம் ஆத்மி
- பஞ்ச்ஷீர்
- ஜலந்தர்
- பஞ்சாப்
- ஆம் ஆத்மி அரசு
- பக்வந்த் மான்
- ராஜ்விந்தர் கவுர் தியாரா
ஜலந்தர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஜலந்தர் தொகுதி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவிற்கு நெருக்கமானவராக லக்கி ஓபராய் என்பவர் இருந்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி சார்பில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வந்த இவரது குடும்பத்தினருக்கு கட்சிக்குள் கணிசமான செல்வாக்கு இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு லக்கி ஓபராய் தனது வாகனத்தில் வழிபாட்டிற்காக சென்றார். காலை 7.50 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவர் வாகனத்தில் அமர்ந்திருந்த போதே துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
சுமார் 5 முதல் 10 சுற்று வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், லக்கி ஓபராய் உடலில் 5 குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கண்காணிப்பு கருவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது’ என்று அரசை கடுமையாக சாடியுள்ளார்.
