×

இந்தியா-பாக். போட்டி ரத்தால் ரூ. 2200 கோடி நஷ்டம்: ஐசிசி அபராதம் விதிக்க வாய்ப்பு

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்றாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பட்டியலிடப்பட்ட போட்டி நடக்காவிட்டால் ரூ. 2200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகள், இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஆட மறுத்ததால் வங்கதேசம் அணி நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா – பாக். இடையே வரும் பிப். 15ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறும் போட்டியில் பாக். அணி ஆடாது என, நேற்று முன்தினம் பாக். அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா – பாக். இடையிலான போட்டி நடைபெறாவிட்டால் விளம்பர வருவாய், ரூ. 200 முதல் 250 கோடி வரை இழப்பு ஏற்படும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்போட்டி நடைபெறாவிட்டால் ஒட்டுமொத்தமாக, ரூ.2200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்தியா – பாக். இடையிலான போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்புவர். அந்த போட்டியின்போது போடப்படும் விளம்பரங்களுக்கு, 10 நொடிக்கு ரூ. 40 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை தொடரில் பட்டியலிடப்பட்டபடி இந்தியாவுடன், பாக். ஆடாவிட்டால் அதற்குரிய புள்ளிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும். மேலும், பாக். கிரிக்கெட் வாரியத்துக்கு பெரியளவில் அபராதம் விதிக்கும் அதிகாரமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) உள்ளது.

Tags : India ,Pak ,ICC ,New Delhi ,Pakistan ,T20 World Cup ,India, ,Sri Lanka ,
× RELATED யு19 உலக கோப்பை கிரிக்கெட்;...