×

டி.20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி புறக்கணிப்பு; பாகிஸ்தானின் செயல் நியாயமற்றது: ஐசிசி கடும் கண்டனம்

துபாய்: டி.20 உலக கோப் பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வரும் 8ம்தேதி முதல் மார்ச் 9ம்தேதி வரை நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் வரும் 15ம்தேதி மோத உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பில்லை, இதனால் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. இதனால் அந்த அணி தொடரில் இருந்து விலகியதால் ஸ்கார்ட்லாந்து சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்தியாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி “அனைத்து தகுதியுள்ள அணிகளும் அட்டவணைப்படி சமமாக போட்டியிட எதிர்பார்க்கப்படும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் மட்டும் பங்கேற்க மறுக்கும் நிலை நியாயமில்லாதது. பாகிஸ்தான் அரசின் இம்முடிவு உலக கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கோ எந்த வகையிலும் நன்மை அளிப்பதாக இல்லை.

குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்பது, போட்டியின் உணர்வையும் புனிதத்தையும் பலவீனப்படுத்தும். அரசு முடிவுகளை ஐசிசி மதித்தாலும், இம்முடிவு உலக விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள கோடிக்கணக்கானவர்கள் உட்பட உலகளாவிய ரசிகர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல. இதனால் பிசிபி தனது சொந்த நாட்டில் கிரிக்கெட்டில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒரு நடவடிக்கை பாகிஸ்தானையும் சேர்த்து, மற்ற உறுப்பினர் நாடுகளையும் பாதிக்கும். ஆடவர் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முதன்மை நோக்கம். இது பிசிபி உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட பொறுப்பாகும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பிசிபி ஆராயும் என எதிர்பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு காத்திருக்கும் சிக்கல்?: பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தால் பல சிக்கல்கள் ஏற்படும். ஒளிபரப்பு நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். அவர்கள் ஐசிசி மீது வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு கேட்க வாய்ப்புள்ளது. அந்த நஷ்ட ஈட்டுத் தொகையைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வசூலிக்க ஐசிசி நடவடிக்கை எடுக்கலாம். ஒப்பந்தத்தை மீறியதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் அபராதம் விதிக்கப்படலாம். நிலைமை மோசமானால், வருங்கால ஐசிசி தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது.

தோல்வி பயத்தால் இந்த முடிவு: பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் கூறுகையில், “இந்தியாவிடம் விளையாடினால் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆசிய கோப்பையில் 3 போட்டியிலும் தோற்ற நிலையில், மீண்டும் இந்தியாவுடன் தோற்றால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் கோபம் அடைவார்கள். மானத்தை காப்பாற்ற தான் பாகிஸ்தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக’’ அவர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு வாக் ஓவர் வெற்றி: பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கை செல்லும். ஐசிசி விதிமுறைகளின்படி, வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பிலும் கலந்து கொள்வார்கள். போட்டி நாளன்று சரியான நேரத்திற்கு மைதானத்திற்கு சென்று நடுவரின் அறிவிப்புக்காகக் காத்திருப்பார்கள்’’ என்றார். பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு `வாக்-ஓவர்’ முறையில் வெற்றி வழங்கப்படும். இதன் மூலம் 2 புள்ளிகள் கிடைக்கும்.

Tags : ICC ,India ,T20 World Cup ,Pakistan ,Dubai ,Sri Lanka ,
× RELATED இந்தியா உடனான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான்: ஐசிசி எச்சரிக்கை!