- தாய்லாந்து மாஸ்டர்ஸ்
- பாங்காக்
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
- தேவிகா சிஹாக்
- வெரங்கன்
- கோ ஜின் வெய்
- பேங்காக், தாய்லாந்து
பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், மலேசிய வீராங்கனை கோ ஜின் வெயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் (20), காலிறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை சுபனிதா கேடதாங்கை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
அதைத் தொடர்ந்து, அரையிறுதியில் தைவான் வீராங்கனை ஒய்.ஹுவாங்கை வெற்றி கண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தேவிகா சிஹாக் – மலேசிய வீராங்கனை கோ ஜின் வெ மோதினர். இப்போட்டியின் துவக்கம் முதல் சூறாவளியாய் சுழன்றாடி கோ ஜின்னை திணறடித்த தேவிகா, முதல் செட்டை 21-8 என்ற புள்ளிக்கணக்கில் அநாயாசமாக வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய தேவிகா அந்த செட்டை 21-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.
அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார். இப்போட்டியில் பல முன்னணி இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றபோதும் தேவிகாவை தவிர மற்றவர்கள் காலிறுதிச் சுற்றுக்குள் தோல்வியை தழுவி வெளியேறினர். இந்தியா சார்பில் பங்கேற்றோரில் ஒற்றை ஆளாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தற்போது சாம்பியன் பட்டத்தையும் தேவிகா கைப்பற்றி உள்ளார்.
