சென்னை: மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் தொடர்கிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட் ஏமாற்றமே என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: பொருளாதார வளர்ச்சி 2025-2026-ல் 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும். இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவது, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் 41 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. மக்கள் விரோத பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது.
* ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: ஒன்றிய பட்ஜெட்டில் மூலதனச் செலவு 10% உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமான சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையிலும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் இயக்கம் 2.0 திட்டத்திற்காக ரூ.40,000 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பதன் மூலம் வேலைவாய்ப்பும், அந்நிய முதலீடுகளும் பெரிய அளவில் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமும் பயன்பெற போகிறது. நாடும், நமது தமிழ்நாடும் மிகுந்த பயனடையும் வகையில் சிறப்பான முறையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 11.7 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு எப்படி நடை போடும்? சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது.
* இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: நிதி நிலை அறிக்கை நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் திசைவழியில் அமைந்துள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரைப் படி மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரிப்பகிர்வு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஆண்டு வருமானம் இரட்டிப்பாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற, உருப்படியான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கப்படவில்லை. நிதிநிலை அறிக்கை உரித்து பார்த்தால் ஒன்றும் கிடைக்காது என்பதை உணர்த்தும் வெங்காய நிதி நிலை அறிக்கையாகும்.
* பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் இந்த பட்ஜெட் அனைவரும் ஏற்கும் வகையில் உள்ளது. சிறப்பான பட்ஜெட்டை அறிவித்த ஒன்றிய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை. மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வு 41 விழுக்காடாகவே தொடரும் என்கிற 16 வது நிதி ஆணையத்தின் பரிந்துரையானது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை.
மிகப்பெரிய ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் கொடுத்துள்ளது. பட்ஜெட் அறிவித்ததும் பங்குச் சந்தை கடுமையாகச் சரிவதைப் பார்த்தாலே இந்த பட்ஜெட் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட் இது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜ கூட்டணிக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்.
* பாமக தலைவர் அன்புமணி: தமிழ்நாட்டில் ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் நேரடி வரிவருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
* அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஜவுளிப் பூங்காக்கள், காதி மற்றும் கைத்தறித் தொழில்களை வலுப்படுத்திடும் வகையில் மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய திட்டம் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளன.
புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவையான 17 வகையான மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரிக்கு முழுமையான விலக்கு, தனியார்த் துறையோடு இணைந்து நாடு முழுவதும் மருத்துவ மையங்கள், மருந்து தயாரிப்புக்கான திட்டத்திற்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ஆகியவை பாராட்டுதலுக்குரியது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள், ஐஐடி கல்வி நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கென முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாமல் போனது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.
இதேபோல் பிரேமலதா(தேமுதிக பொதுச்செயலாளர்), ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
* தமிழ்நாட்டை நினைவுகூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை ஒன்றிய அரசு மீது கனிமொழி விமர்சனம்
2026-27ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று பட்ஜெட் குறித்து திமுக எம்பி கனிமொழி தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மத்திய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
