×

பழநியில் தைப்பூசம் கோலாகலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

பழநி: பழநியில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மாலையில் நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகனின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன. 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம், வெள்ளி தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை 4 மணிக்கு கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி வள்ளி – தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது. கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் உலா வந்தனர். கோயில் யானை கஸ்தூரி பின்தொடர பக்தர்களின் விண்ணை பிளந்த ‘அரோகரா’ கோஷம் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேர் நிலைக்கு வந்தவுடன் தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நடந்தது.

தேரோட்டத்தின் காரணமாக நேற்று முன்தினம் முதலே பழநியில் பக்தர்கள் குவிய துவங்கினர். அவர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் காண்போரை பரவசமடைய செய்தது. வழிநெடுகிலும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆறாம் படை வீடான அழகர்கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் தைப்பூசத்தை முன்னிட்டு, பால், பழம், பன்னீர் உள்பட 16 வகை பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதேபோல், முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை சாமிநாத சாமி கோயிலில் தைப்பூசவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

* பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் கடல்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரத்தேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே கோயில் வளாகத்தில் தங்கி, நேற்று அதிகாலை நடைதிறந்தவுடன் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர் கடற்கரை காட்சியளித்தது.

* வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி காலை 7.30 மணிக்கு, தருமசாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. நேற்று காலை ஜோதி தரிசனம் நடந்தது.

காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் இன்று காலை 5.30 மணிக்கு, மனிதன் இறைவனை காண மனதில் இருக்கும் எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விளக்கி கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்பு திரை என 6 காலங்களில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.

* திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஈசான்ய குளத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

* தேர் சக்கரத்தில் சிக்கி முதியவர் தலைநசுங்கி பலி
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில் தைப்பூசத் திருவிழாவின் 10ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தின் போது தேரை திருப்புவதற்கு பாரம்பரியமாக கழுகுமலை களஞ்சியம் தெருவை சேர்ந்த சப்பாணிமுத்து (70) என்பவர் தேருக்கு ‘கட்டை’ போடும் பணியை செய்து வந்தார். தெற்கு ரதவீதியில் இருந்து கீழ ரதவீதிக்கு தேர் வந்தபோது சப்பாணிமுத்து சக்கரத்தின் இடையே கட்டையை சொருகினார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து தேர் சக்கரத்திலேயே சிக்கினார். இதில் தேர் அவரது தலையில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.

 

Tags : Thaipusam Kolakalam ,Palaniil ,Palani ,Thaipusa festival ,Palaniel ,Thaipuza festival ,Palani Dandayudapani Swami Temple ,Murugan ,Third Corps ,
× RELATED மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில்...