திருச்சி: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ, அமமுக, தமாகா, அன்புமணி (பாமக) கட்சிகள் இணைந்துள்ளது. இதில் அவர்கள் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளையும் கேட்டு வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முடியாமல் அதிமுக திணறி வருகிறது. புதிய கட்சிகள் வருவார்கள் என அதிமுக நிர்வாகிகள் கூறிக்கொண்டு உள்ளனர். ஆனால், இதுவரை புதிதாக எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை.
இதனால் கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு ‘வீக்காக’ உள்ள தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், திருச்சி மத்திய மண்டலத்தில் 9 மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு அதிமுக தலைமை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து, மாற்று தொகுதிக்கு சென்று போட்டியிடவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் மட்டுமே வெற்றி பெற்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, மத்திய மண்டலத்தில் உள்ள 41 சட்டமன்ற தொகுதிகளில் நிறைய திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அறிவித்த திட்டங்கள் உடனுக்குடன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு முற்றிலும் சரிந்துள்ளது.
கடந்தாண்டு அதிமுகவை சேர்ந்த தேர்தல் ‘டீம்’ ரகசிய சர்வே எடுத்துள்ளது. இதில், அவர்களுக்கு சாதகமான முடிவு வரவில்லை. தொடர்ந்து, ஜனவரி மாதமும் சர்வே எடுத்துள்ளது. இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முடிவுகள் வரவில்லையாம். இதையடுத்து, இந்த தகவல் தலைமையிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி இதை வெளியில் சொல்ல வேண்டாம். 41 தொகுதிகளும் வீக்காக இருப்பதால், இந்த தொகுதிகளை கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு ஒதுக்கி விடலாம்.
இவ்விஷயத்தை தலைமை பார்த்து கொள்ளும் என டெல்டாவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை நேரில் வரவழைத்து விஷயத்தை சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்களாம். வீக்கான தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக இருக்கிறது. ஆனால், இதற்கு கூட்டணி கட்சியினர் சம்மதிப்பார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் ’’ என்றனர்.
