×

பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் சாவு: திட்டக்குடி அருகே சோகம்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே காரும், தனியார் பஸ்சும் மோதியதில் வேளாண் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ம.புடையூரில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் 6 பேர் உதவி பேராசிரியர் ரகுநாத்தின் காரை எடுத்துக்கொண்டு பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடிக்கு சென்று அங்குள்ள கடையில் டீ குடித்துவிட்டு நேற்று அதிகாலை கல்லூரிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

ராமநத்தம் அடுத்த எழுத்தூர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் சென்றது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி சென்ற தனியார் பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதின. இதில் காரில் வந்த செங்கல்பட்டை சேர்ந்த மாதவன் மகன் தரணிசெல்வன்(20), திருவண்ணாமலை மாவட்டம் கல்வெட்டு ஏழுமலை மகன் விநாயகம்(19), கடலூர் மாவட்டம் சிதம்பரம் கண்ணன் மகன் நிஷாந்த்(19) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

* சகோதரர்கள், சகோதரிகளும் உயிரிழந்த பரிதாபம்
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே பாச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(50). இவரது மனைவி பரிமளா(45), தனது தங்கை சுதா(43), அவரது 2 மகள்களுடன் தைப்பூச விழாவையொட்டி, சேலம் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோயிலுக்கு பாத யாத்திரை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பாதி வழியில் அவர்களை டூவீலரில் சண்முகம் ஏற்றி வந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே மூனுசாவடி என்னுமிடத்தில் வந்தபோது சேலத்திலிருந்து நாமக்கல் சென்ற கார், டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பரிமளா, சுதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  குமாரபாளையம், தட்டாங்குட்டை, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(44), லாரி டிரைவர். இவரது மனைவி ஜோதி (30).

இவர்களது மகன்கள் லிங்கேஸ்வரன்(13), நவனேஸ்வரன்(11) ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன்(25) என்பவரது பைக்கில் சேலம் மாவட்டம், காளிப்பட்டி கந்தசாமி கோயில், தைப்பூச திருவிழாவுக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றபோது, சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனூர் பைபாசில் பைக் மீது லாரி மோதி லிங்கேஸ்வரன், நவனேஸ்வரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tags : Thittakudi ,M.Budaiyur ,Ramanathapuram ,Cuddalore district ,Assistant Professor ,Raghunath ,
× RELATED மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில்...