×

ஏரி கரைகளில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

ஊட்டி : ஊட்டி ஏரி கரையோரங்கள் குப்பை கொட்டும் இடமாக பலரும் பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ஊட்டி ஏரியை சுற்றிலும் உள்ள நடைபாதைகளில் பலரும் நடைபயணம் மேற்கொள்கின்றனர். மேலும், ஊட்டி ஏரி மற்றும் இதன் கரை ஓரங்கள் சிறந்த சதுப்பு நிலங்களாக உள்ளது. இங்கு ஏராளமான நீர்ப்பறவைகள் மற்றும் பல்வேறு பறவைகள் வாழ்கின்றன. சில சமயங்களில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன. அதேபோல், நகரில் சிறந்த பசுமை நிறைந்த இடமாகவும் இந்த ஊட்டி ஏறி மற்றும் அதன் கரையோரங்கள் காட்சியளிக்கின்றன.

அழகு நிறைந்த இந்த ஊட்டி ஏறி கரையோரங்களில் தற்போது சிலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர்.இதுபோன்று குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் ஏரி கரையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனையும் தாண்டி சென்று சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், ஏரி கரையோரங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி,ஏரியின் அழகும் பாதிக்கிறது. இங்கு வரும் பறவைகள் பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த கரையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் சதுப்பு நிலங்கள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, ஏரிக்கரை ஓரங்களில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்க சுற்றுலாத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : FEEDER ,FEEDER LAKE ,Nilgiri district ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...