×

ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடியவர் கைது

கோபி,ஜன.30: கோபி அருகே உள்ள திங்களூரில் ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த 40,000 ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்தனர். கோபி அருகே உள்ள திங்களூர் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (42). இவர் நேற்று முன்தினம் 40,000 ரூபாய் பணத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்டியில் வைத்துக் கொண்டு அவருடன் வேலை செய்து வரும் விஜய் என்பவருடன் திங்களூர் சென்றுள்ளார்.

அங்கு ஒரு பேக்கரி முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இரண்டு பேர் ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வந்தனர்.

இந்நிலையில் பணத்தை திருடிய திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த கணேசன் மகன் ராமு (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமு தற்போது திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராமுவிடம் இருந்து 40,000 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : Gopi ,Thingalur ,Venkatachalam ,Thingalur Nichampalayam ,
× RELATED பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்